2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

'போரால் சிதைந்த நம் பகுதிகளை கட்டியெழுப்ப முதலீட்டாளர்கள் முன்வரவேண்டும்'

Menaka Mookandi   / 2016 ஓகஸ்ட் 22 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

'வடக்கில் இடம்பெற்ற கடந்த 30 வருடகால போரினால், நமது வளங்கள் அழிவுற்றுள்ளன. இவ்வாறு வளங்கள் அழிவற்று சிதைந்த நம் பகுதிகளில், சரியான முதலீடுகள் மூலம் அபிவிருத்தியை முன்நகர்த்தி செல்வதற்கு முதலீட்டாளர்கள் முன்வரவேண்டும். இது ஒரு முதல் படி. இதனை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்' என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

வடக்கு மாகாண முதலீட்டாளர்கள் சம்மேளன அங்குரார்ப்பண நிகழ்வு, இன்று திங்கட்கிழமை (22), யாழ். மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

'வடமாகாண ஆளுநரால் ஆரம்பிக்கப்பட்ட இந்த முதலீட்டாளர்கள் சம்மேளனம், ஒரு சிறந்த ஆரம்பம். இதனால், நமது மக்கள் பயன்பெற வேண்டும். சர்வதேச புரிந்துணர்வுடன் ஏற்பட்ட இந்த ஆட்சி மாற்றத்தில் எமது பங்கும் உள்ளது. இத்திட்டத்தின் ஊடாக வடக்கில் உள்ள விதவைகளின் வாழ்வாதாரம், இளைஞர்களின் வேலைவாய்ப்பு என்பன கட்டியெழுப்ப வேண்டும்.

சூழலுக்கு பாதிப்பு இல்லாமல், தொழிற்சாலைகளை மீள ஆரம்பித்து, வடக்கின் பொருளாதாரம் மேம்படுத்தப்படல் வேண்டும். குறிப்பாக, காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையை மீள ஆரம்பித்தாலும், அங்கு அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ள முடியாது.

ஆனால் வெளிநாட்டில் இருந்து மூலப்பொருள் எடுத்துவரப்பட்டு இங்கு பொதியிடல் செயற்பாட்டை முன்னெடுக்க முடியும். இவ்வாறு, சூழலுக்கு பாதிப்பற்ற அபிவிருத்தித் திட்டங்கள் மூலம், நமது மக்கள் பயன்பெறவேண்டும்' என அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X