2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

‘வடக்கு ஸ்தம்பிக்கும்’

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 29 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.திருச்செந்தூரன்

“இலங்கை அரசாங்கம், இந்திய அரசாங்கத்துக்கு அடிபணிந்து, கோரிக்கைகளில் மாற்றத்தினை ஏற்படுத்தினால், வடபகுதி ஸ்தம்பிக்கும் வகையிலான பாரிய போராட்டத்தினை முன்னெடுப்போம்” என்று, வடமாகாண கடற்றொழிலாளர் சம்மேளனம், எச்சரிக்கை விடுத்தது.  

யாழ். ஊடக அமையத்தில், நேற்று (28) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அச்சம்மேளனம், மேற்கண்டவாறு குறிப்பிட்டது.  

“எதிர்வரும் நாளை (30) மற்றும் நாளை மறுதினம் (31), கொழும்பில் நடைபெறவிருந்த இந்திய - இலங்கை மீனவர்களின் அமைச்சு மட்டப் பேச்சுவார்த்தை, இந்தியாவின் தலைநகரம் புதுடெல்லிக்கு மாற்றம் செய்யப்பட்டமைக்கு, அச்சம்மேளனம், தனது அதிருப்தியைத் தெரிவித்தது.  

“இந்திய மற்றும் இலங்கை மீனவர்கள் சம்பந்தமான அமைச்சு மட்டப் பேச்சுவார்த்தை, கொழும்பில் நடைபெறவிருந்த போதும், தற்போது புதுடெல்லிக்கு மாற்றப்பட்டமை சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது. இருதரப்புப் பேச்சுவார்த்தை, கடந்த காலங்களில் இழுத்தடிப்புச் செய்யப்பட்டு, கடந்த நவம்பர் 2ஆம் திகதியன்றே இணக்கம் காணப்பட்டது.  

கொழும்பில் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை, திடீரென மாற்றம் செய்யப்பட்டமை, இந்திய அரசாங்கத்தினால் இலங்கை அரசாங்கத்துக்கு ஏதோ ஓர் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதைக் காட்டுகின்றது.  

முன்னர் எடுத்துக்கொண்ட விடயங்களில் மாற்றம் செய்யப் போகின்றார்களா? அல்லது இந்தியா, அரசு மட்டத்தில் அழுத்தங்களைக் கொடுத்து, வேறு ஏதாவது நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போகின்றதா? என்ற கேள்விகள் எழுகின்றன.  

வடபகுதி மீனவர்கள் ஆண்டாண்டு காலமாகத் தொடர்ச்சியாக நடத்திவரும் போராட்டங்கள் மற்றும் முன்மொழிவுகளின் அடுத்த கட்ட நகர்வுகள், எதிர்பார்க்கும் தீர்வினை எட்டாத சந்தர்ப்பத்தில், அடுத்த கட்ட நகர்வுக்குச் செல்ல வேண்டிவரும். எனவே, இலங்கை அரசாங்கம், தெளிவான நிலைப்பாட்டில் இருக்க வேண்டும். மீனவர்களின் துன்பகரமான நிலைப்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மீனவர்களின் எதிர்காலத்துக்கான நிலைப்பாட்டினை எடுக்க வேண்டும்” என, அச்சம்மேளனம், மேலும் வலியுறுத்தியது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X