2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

மாணவன் கொலை; 10ஆவது சந்தேகநபருக்கும் விளக்கமறியல்

Menaka Mookandi   / 2014 நவம்பர் 12 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற பொன் அணிகளின் போர் துடுப்பாட்ட போட்டியின்போது, அமலன் என்ற மாணவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 10ஆவது சந்தேகநபரை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நிதவான் திருமதி ஜோய் மகிழ்மகாதேவா உத்தரவிட்டார்.

சம்பவத்துடன் தொடர்புடைய 9 சந்தேகநபர்கள், ஏற்கெனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே 10ஆவது சந்தேகநபரான சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன், இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணிக்கும் யாழ்ப்பாண கல்லூரி அணிக்கும் இடையில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரி மைதானத்தில் கடந்த மார்ச் 15ஆம் திகதி இடம்பெற்ற பொன் அணிகள் போரின் போது, பழைய மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பில், சென்.பற்றிக்ஸ் கல்லூரியின் பழைய மாணவரான யாழ்ப்பாணம், செட்டியார்த் தெருவைச் சேர்ந்த ஜெயரட்ணம் தர்ஷன் அமலன் (வயது 23) என்ற இளைஞன் அடித்து கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலையுடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தில், ஏற்கனவே 9 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், 10ஆவது சந்தேகநபர், தனது சட்டத்தரணியூடாக நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இந்த வழக்கு, செவ்வாய்க்கிழமை (11) மல்லாகம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, முதல் 9 சந்தேகநபர்கள் மற்றும் சரணடைந்தவர் உள்ளிட்ட 10 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 25ஆம் திகதி விளக்கமறியலில் வைத்து நீதவான் உத்தரவிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .