2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

யாழில் ரூ. 43 இலட்சம் மோசடி

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 17 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்.மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களில் 43 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் காசோலை மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக யாழ். உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பி.ஏ.நிஹால் பெரேரா வெள்ளிக்கிழமை (17) தெரிவித்தார்.

யாழ்.தலைமை பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

யாழ்., மீசாலை பகுதியில் வியாபார நோக்கத்திற்காக 17 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் காசோலை மோசடி செய்தமை அதிகூடிய மோசடி சம்பவமாக இடம்பெற்றுள்ளது.

அத்துடன், யாழ்ப்பாணத்தில் வியாபார நோக்கத்திற்காக 13 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் காசோலை மோசடியும், கே.கே.எஸ். வீதியில் அதே நோக்கத்திற்காக 8 இலட்சம் ரூபாய் காசோலை மோசடியும், மற்றும் அரியாலை பகுதியில் 5 இலட்சம் ரூபாய் காசு மோசடியும் இவ்வாறு இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பிலான சந்தேகநபர்கள் சிலர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், மற்றய சந்தேகநபர்கள் தொடர்பிலான புலன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

புதையல் இருப்பதாக மோசடி


போலி தங்கக்கட்டிகளை விற்பனை செய்து 65 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் நிதி மோசடியில் ஈடுபட்ட நான்குபேரை கடந்த 4ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

போலி தங்கக்கட்டிகளை புதையல் எனக்கூறி பண மோசடி செய்த அநுராதபுரத்தை சேர்ந்த நால்வர் கடந்த 4ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

கீரிமலை பகுதியை சேர்ந்த ஒருவரிடம் 20 இலட்சம் ரூபாவும் யாழ்;.முஸ்லிம் பள்ளிவாசல் வீதியை சேர்ந்த ஒருவரிடம் 42 இலட்சம் ரூபாவும் யாழ்.சென்.பற்றிக்ஸ் வீதியை சேர்ந்தவரிடம் 3 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாவும் மேற்படி 4 சந்கேதநபர்களும் மோசடி செய்துள்ளனர்.

வீதி புனரமைப்பு பணியில் ஈடுபட்டு வந்தபோது, தங்கப்புதையல் கிடைத்ததாக கூறி முதலில் ஒரு தங்ககட்டிகளை காட்டிவிட்டு, பணத்தை வாங்கிய பின்னர் பித்தளை மற்றும் ஈயக்கட்டிகளை கொடுத்து ஏமாற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ரூ. 16 இலட்சம் கொள்ளை

யாழ்.மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரத்தில் 16 இலட்சத்து 79 ஆயிரத்து 580 ரூபாய் பெறுமதியான பணம், நகைகள் மற்றும் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

இந்த கொள்ளைச்சம்பவங்களில் இம்மாதம் 10ஆம் திகதி தெல்லிப்பளையில் வீடு உடைத்து 11 இலட்சத்து 78 ஆயிரத்து 630 ரூபாய் பெறுமதியான பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவமே அதிகூடிய கொள்ளை சம்பவமாக இருக்கின்றது.

அத்துடன், சாவற்காட்டு பகுதியில் இம்மாதம் 7ஆம் திகதி வீடு உடைத்து 400 ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டமை அதிகுறைந்த கொள்ளை சம்பவமாகவுள்ளது.

அத்துடன், வங்கியிலிருந்து பணம் எடுத்து வந்த பெண்ணிடம் மானிப்பாய் பகுதியில் வைத்து 1 இலட்சம் ரூபா வழிப்பறி செய்யப்பட்டமை, சுன்னாகத்திலுள்ள கடையொன்றில் வேலை செய்தவர்கள் கடையிலிருந்து 1 இலட்சத்து 45 ஆயிரத்து 750 ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டமை உள்ளிட்ட கொள்ளை சம்பவங்களுடன் வீடு உடைக்கப்பட்ட கொள்ளை சம்பவங்களும் உள்ளடங்குகின்றன.

இந்த கொள்ளை சம்பவங்கள் தொடர்பில் சந்தேகநபர்கள் சிலர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கைகலப்பில் ஈடுபட்டவர்கள் கைது


யாழ்.மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களில் கைகலப்பில் ஈடுபட்ட மற்றும் அடித்து காயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் 102 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஒருவர், சூழல் மாசடைதலுக்கு காரணமான 6 பேர், பாதுகாப்பு பங்கம் விளைவித்த 6 பேர், கடத்தலில் ஈடுபட்ட ஒருவர், சட்டவிரோத மதுபானம் விற்பனை செய்த 47 பேர், கொள்ளையில் ஈடுபட்ட ஒருவர், குடிபோதையில் வாகனம் செலுத்திய 11 பேர், அனுமதியின்றி வீட்டுக்குள் நுழைந்த 02 பேர், பொருட்களுக்கு நஷ்டம் ஏற்படுத்தி 07 பேர், சந்தேகத்தின் பேரில் 31 பேர், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 54 பேர், விபத்து ஏற்படுத்திய 05 பேர், பாரிய குற்றங்களில் ஈடுபட்ட 10 பேர், ஏனைய குற்றங்கள் செய்த 24 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீன் வலை எரித்தவர்களுக்கு விளக்கமறியல்

யாழ்.சாவகச்சேரி பகுதியில் கடந்த 11 ஆம் திகதி 1 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா பெறுமதியான வலையை எரித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

வரணி பகுதியை சேர்ந்த மேற்படி சந்தேகநபர்கள் கடந்த 12ஆம் திகதி சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தால் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பஸ்ஸுக்கு கல் எறிந்தவர் விளக்கமறியல்

இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொண்ட சந்தேகநபர் ஒருவர் 14 நாட்களுக்கு மல்லாகம் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேற்படி சந்தேகநபர் கடந்த 14 ஆம் திகதி மல்லாகம் கோட்டைக்காட்டு பகுதியில் சென்றுகொண்டிருந்த பேருந்து மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

இதனால், பேருந்தின் 7000 ரூபா பெறுமதியான பாகம் ஒன்று சேதமடைந்தது. இதனையடுத்த, சந்தேகநபரை கைது செய்த தெல்லிப்பளை பொலிஸார், மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினார்கள்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .