2025 மே 22, வியாழக்கிழமை

'கப்பம் கோரும் சம்பவங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க பாதுகாப்பு செயலாளர் உத்தரவு'

Suganthini Ratnam   / 2011 மே 08 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். மாவட்டத்தில் கப்பம் கேட்டு மிரட்டல்கள் விடுக்கப்படும் சம்பவங்கள் தொடர்பில் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தனக்கு உத்தரவிட்டுள்ளதாக யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை வர்த்தக சமூகத்தினருடன் நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறினார்.

யாழ். வர்த்தகர்களுக்கு ஏதாவது பிரச்சினை காணப்படின் அதனை தங்களது கவனத்திற்கு கொண்டு வருமாறும்  கப்பம் கேட்பவர்களை தங்களுக்கு காட்டித்தருமாறும் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி கேட்டுக்கொண்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

வர்த்தக சமூகத்தவர் மற்றும் பொதுமக்களின் உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் எவராவது பங்கம் விளைவிப்பார்களானால் படையினர் அதனைப் பார்த்துக்கொண்டு இருக்கமாட்டார்கள்.

தற்போதுள்ள சமாதான சூழ்நிலையில் யாழ்ப்பாணத்தில் பல அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. யாழ்ப்பாணம் சிங்கப்பூரைப் போன்று வர்த்தக பொருளாதாரத்தில் முன்னேற்றம் கண்டு வருகிறது. இது அவர்களின் கடுமையான உழைப்பு மற்றும் அவர்களின் அர்ப்பணிப்புக்களின் மூலமே சாத்தியமானது.

நம்பிக்கையான வர்த்தக உறவுகளும் யாழ்ப்பாண அபிவிருத்தியில் முக்கிய பங்காற்றுகிறது. வர்த்தக பொருளாதாரத்தில் யாழ்ப்பாண சமூகம் முன்னேறுவதை எவர் தடுத்தாலோ அல்லது கப்பம் கோரினாலோ அல்லது மிரட்டல் விடுத்தாலோ எனது தொலைபேசி இலக்கமான 077 – 3833906 என்ற இலக்கத்திற்கு எந்தநேரத்திலும் தொடர்புகொள்ள முடியும்.

வர்த்தக சமூகத்தினர் மற்றும் பொதுமக்கள் தங்களது பிரச்சினைகள் குறித்து எனது தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். 24 மணி நேரத்திற்குள் படையினர் அவர்களை கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்துவார்கள். யாழ்ப்பாணத்தில் குற்றமில்லாத ஒரு சமுதாயம் உருவாக நான் வாழ்த்துகிறேன் என்றார். 

இந்த நிகழ்வில் யாழ். வர்த்தக சங்கத் தலைவர் விஜயசேகரம், வர்த்தக சமூகத்தினர் படை உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X