2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

நீதிமன்ற தீர்ப்பு மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி: அமைச்சர் டக்ளஸ்

Menaka Mookandi   / 2011 மே 13 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கான வழக்கில் நீதிமன்றம் வழங்கிய நியாயத் தீர்ப்பு எமது மக்களுக்கே வெற்றியை தந்திருக்கிறது. இதுபோல் நிகழவிருக்கும் தேர்தலிலும் எமது மக்கள் தமது வெற்றியை தீர்மானிக்க விரும்பி எம்மையே ஆதரிப்பார்கள்  என்பது உறுதியாகிவிட்டது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா  தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், 'யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கான எமது வேட்பு மனுக்கள் தேர்தல் திணைக்களத்தால் நிராகரிக்கப்பட்ட போது எமது மக்களின் மனங்களில் தீராத துயரம் குடிகொண்டிருந்தது. தாம் ஏமாந்து போய்விடுவோமோ என்ற ஏக்கம் அவர்களிடம் நிறைந்திருந்தது.

கறையான்கள் புற்றெடுக்க கருநாகங்கள் குடிகொண்டது போல் கால காலமாக தம்மோடு வாழ்ந்தும், பழகியும், தமது இன்ப துன்பங்களில் பங்கெடுத்தும், கூப்பிட்ட குரல் கேட்டு ஓடி வந்து குறை தீர்க்கவும், உறவுக்கு கரம் கொடுத்து உரிமைக்கு குரல் கொடுத்தும் வரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் தேர்தலில் போட்டியிட முடியாத சூழலை பயன்படுத்தி, தமக்கு எந்த சேவைகளையுமே ஆற்ற விரும்பாமலும், கடந்த கால அழிவுகளுக்கு துணை போனவர்களுமான சுயலாப அரசியல் தலைமைகள் தமது உள்ளூராட்சி மன்றங்களைக் கைப்பற்றி தமது வாழ்வியல் உரிமைகளை தொடர்ந்தும் சீரழித்து விடுவார்களோ என்ற அச்சம் எமது மக்களிடம் நிலவியிருந்தது.

ஆனாலும், எமது மக்களின் மன உணர்வுகளை புரிந்து கொண்ட நாம் நியாயத் தீர்ப்பினை எதிர்பார்த்து நிராகரிக்கப்பட்டிருந்த எமது வேட்பு மனுக்களுக்காக நம்பிக்கையோடு நீதிமன்றம் சென்றிருந்தோம். நீதிமன்ற தீர்ப்பு நியாயத் தீர்ப்பாகவும், எமது மக்களுக்கு மகிழ்ச்சி தரும் வெற்றியாகவும் வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த வெற்றியானது உண்மையோடும் நேர்மையோடும் உழைத்து வரும் நாம் வரப்போகும் தேர்தலிலும் வெற்றியை பெறுவோம் என்பதற்கு சமிஞ்ஞை காட்டியிருக்கும் செய்தியாகும்.

வெற்றறிக்கைகளும் விவேகமற்ற வாய் வீச்சுக்களும் அழிவுகளை தந்தனவே அன்றி  இதுவரை எதையும் பெற்றுத்தந்திருக்கவில்லை என்பதை உணர்ந்து எமது மக்கள் சுயலாப அரசியல் தலைமைகளை நிராகரிப்பதற்கான சந்தர்ப்பமாகவும், இணக்க வழிமுறை அரசியல் மூலம் அரசாங்கத்துடன் கை குலுக்கியே எமது வாழ்விடங்களை அபிவிருத்தியால் தூக்கி நிறுத்தவும், அரசியல் தீர்விற்கான அதிகாரப்பகிர்வு நோக்கிய அரசியலை பலப்படுத்தவும் முடியும் என்பதை வெளிப்படுத்தும் வாய்ப்பாகவும் எமது மக்கள் எதிர்வரும் தேர்தலை பயன்படுத்தியே தீருவார்கள் என்பது உறுதி.

நாம் கடந்த கால அழிவுகளில் இருந்து மீண்டெழுந்த ஒரு சமூகமாக உருவெடுப்பதற்கு எமது மக்களே தீர்மானிக்கும் சக்தியாகவும், சந்தர்ப்பங்களை சரிவரப் பயன்படுத்தும் மதிநுட்பம் நிறைந்தவர்களாகவும் திகழ்வார்கள் என்றும் நம்பிக்கை உள்ளது' எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X