Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2011 ஜூலை 20 , பி.ப. 02:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதற்கு ஆறுதல் கூறுவதற்கு மறுப்பவர்கள், தமிழ் மக்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்ள மறுப்பவர்கள் இன்று வாக்குக் கேட்டு வந்துநிற்கின்றனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணைச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரனால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
யுத்தம் முடிந்து 2 வருடம் பூர்த்தியாகிவிட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச மட்டத்தில் மேற்கொண்ட பரப்புரையால் இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட ஏனைய நாடுகள் இலங்கை அரசுக்குத் தொடர்ச்சியாகக் கொடுத்துவரும் அழுத்தம் காரணமாக தடுப்பிலுள்ள சில இளைஞர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதியுயர் பாதுகாப்பு வலயங்களிலும் சில இடங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் இன்னும் பல ஆயிரம் இளைஞர்கள் இராணுவத் தடுப்பில் உள்ளார்கள். பல கிராமங்களில் மக்கள் மீள்குடியேற்றப்பட வேண்டியுள்ளனர். அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் முற்றாக நீக்கப்படவில்லை. இடம்பெயர்ந்த மக்களுக்கான வீடுகள், வாழ்வாதாரங்கள் எதுவும் சரியான முறையிலில்லை.
மரணச்சடங்கு, விளையாட்டுப் போட்டி, புத்தக வெளியீட்டு விழா, பாடசாலைப் பரிசளிப்பு என அத்தனை விடயங்களிலும் இராணுவத்தினரின் பிரசன்னம் பாதுகாப்பு என்ற பெயரில் மிகக்கடுமையான இராணுவ ஆக்கிரமிப்பு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடக்கம் உள்ளூராட்சிசபை வேட்பாளர்கள் வரை அனைவருக்கும் உயிரச்சுறுத்தல், சமுதாயம் முழுக்க அச்சம் கௌவிய நிலைமை.
உங்களால் சுதந்திரமாக பேச முடிகின்றதா? உங்களால் சுதந்திரமாகக் கூட்டங்களுக்கு செல்ல முடிகின்றதா? இவை ஒருபுறம் இருக்க வடக்குக் கிழக்கின் சகல மாவட்டங்களிலும் தமிழ் மக்களின் நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன. இதனால் பலநூறு மக்கள் தமது சொந்த இடத்திற்குப் போகமுடியாமல் நடுத்தெருவில் நாதியற்று அலைகின்றார்கள்.
வடக்கு இராணுவமயப்படுகின்றது. நிரந்தர இராணுவ முகாம்கள், பயிற்சி முகாம்கள், இராணுவக் குடியிருப்புக்கள் போன்றவை அமைக்கப்பட்டு வருகின்றன. திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம், யாழ்ப்பாணம், நாவற்குழியில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அரச அனுசரணையுடன் குடியேறியுள்ளார்கள்.
மன்னார் மடு வீதியில் சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. பல்வேறு இடங்களில் இதுதான் நடைபெறுகின்றது. தாய், தந்தைக்கு முன்பாக இராணுவத்தினரிடம் சரணடைந்த பலர் இன்று தம்மிடமில்லை என அரசால் கூறப்படுகின்றது.
இறுதி யுத்தத்தில் 40 ஆயிரத்திலிருந்து ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேர்வரை கொல்லப்பட்டிருக்கலாம் என பல சர்வதேச நிறுவனங்கள் கூறுகின்றன. ஒருவர் கூடக் கொல்லப்படவில்லை என அரசு கூறுகின்றது. ஆனால் ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜேயசிங்க 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என இங்கிலாந்தில் கூறியுள்ளார்.
இப்படித் தமிழ் மக்களுக்கு எதிரான பல்வேறுபட்ட அடக்குமுறைகளையும் கட்டவிழ்த்து விட்டவர்கள்தான் இன்று உங்கள் மத்தியில் வாக்குக் கேட்டுவந்துள்ளனர். இதில் ஒரு விடயத்தையாவது இவர்களால் மறுதலிக்க முடியுமா? இதனைப் பற்றி மக்கள் மத்தியில் விவாதிக்க அமைச்சர் டக்ளஸ் உட்பட எந்த அமைச்சராவது தயாராகவிருக்கின்றனரா?
இன்று இலங்கை அரசு பல கேள்விகளுக்குப் பதில் சொல்லவேண்டிய நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. ஐ.நா. சபையின் அறிக்கையில் பாரிய யுத்தக்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், அரசாங்கத்திற்கும் இடையில் கடந்த தை மாதத்திலிருந்து ஆடி மாதம் வரை ஒன்பது சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்துள்ளது.
இராணுவத் தடுப்பில் இருப்போரின் விபரங்களை வெளியிடுவதாகக் கூறினார்கள். இதுவரை வெளியிடவில்லை. நீண்டகாலம் சிறையிலிருக்கும் அரசியல் கைதிகளை மூன்று வாரத்திற்குள் விடுவிப்பதாகக் கடந்த சித்திரை மாதம் கூறினார்கள். ஒருவர்கூட விடுவிக்கப்படவில்லை. அதிகாரப் பகிர்வு தொடர்பாக பேசுவதற்கும் அரசு விரும்பவில்லை.
பொலிஸ் அதிகாரம் தர முடியாது, காணி அதிகாரம் தரமுடியாது எனக் கோஷம் போடுகின்றார்களே அல்லாமல் தமிழருக்கு எதையும் கொடுக்கப்போவதாகக் கூறவில்லை. சரணடைந்த பலபேரைக் காணவில்லை. கைது செய்யப்பட்டவர்கள் பலபேர் இல்லை. இனப்பிரச்சினைக்குத் தீர்வுமில்லை. இவர்கள் இன்று உங்களை இரட்சிக்கப்போவதாக வாக்குக் கேட்க வந்து நிற்கின்றார்கள்.
குறைந்தபட்சம் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லபட்டதற்கு ஆறுதல் கூறுவதற்கு மறுப்பவர்கள், தமிழ்மக்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்ள மறுப்பவர்கள், இன்றும் தமிழ் மக்களின் நிலங்களை கபளீகரம் செய்பவர்கள் இவர்களுக்கு வாக்களிக்க வேண்டுமா என்பதை ஒவ்வொரு வாக்காளரும் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
இடம் தெரியாத, மொழி தெரியாத, எமது பண்பாட்டை அறியாதவர்கள் எமக்கு அபிவிருத்தி செய்கின்றார்களாம். பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை ஏதிலிகளாக்கி கையேந்த வைத்த மமதையில் இவர்கள் இன்று தமிழ் மக்களுக்கு உணவும், இடமும் இருந்தால்போதும் என்கின்றனர். இவர்கள் பெரும்பான்மை என்பதால் என்னவும் செய்யலாம் என்ற இறுமாப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.
மிகச்சிறந்த மொழியையும், மிகச் செழுமையான பண்பாட்டுப் பாரம்பரியத்தையும் கொண்டவர்கள் என்ற அடிப்படையில் இந்த மண்ணில் நாமும் சம உரிமையுடன் கௌரவமாக வாழ விரும்புகின்றோம். இவற்றை அடையவேண்டும் என்றால் தமிழ் மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும்.
அது பலப்படவேண்டுமாகவிருந்தால் சகல உள்ளூராட்சி சபைகளிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றிபெறவேண்டும். இதனை நீங்கள் உங்கள் வாக்குப் பலத்தின் மூலம் நிறைவேற்ற வேண்டும்.
23ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற உள்ளூராட்சிசபைத் தேர்தலில் வீட்டுக்கு நேரே புள்ளடியிட்டு மிக அதிகப்படியான வாக்குகளால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினை வெல்ல வைக்கும்படி கேட்டுக்கொள்கின்றேன்' என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago