2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்

Kogilavani   / 2011 செப்டெம்பர் 06 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)
யாழ். பெண்களின் இன்றைய பரிதாப நிலையை புரிந்துகொண்டு அரசாங்கம் உடனடியாக அவர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என யாழ். மாவட்ட மகளிர் அமைப்பின் தலைவி சரோஜினி சிவச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலும் இனந்தெரியாத நபர்கள் நடமாடியதாகத் தெரிவிக்கப்படும் விவகாரம் குறித்து  யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை உயர் மாநாடு நடைபெற்றது. இதன்போதே அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

'பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து அச்சப்பட வேண்டிய சூழ்நிலை இன்று ஏற்பட்டுள்ளது. யாழ். பிரதேசத்தில் நேர்மாறாக அறிவிக்கப்படாத ஊரடங்குச் சட்டம் அமுலில் இருப்பது போல்தெரிகிறது. பெண்கள் தங்களை பாதுகாப்பதற்காக இரவில் உறங்காதுள்ளனர்.  இவ்வாறான இனந்தெரியாத நபர்களின் நடமாட்டம் உலகில் எங்கும் நடைபெறாத புதுமை. இதை யாரிடம் நாம் கூறுவது' என்றார்.

யாழ். ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் அடிகளார் இங்குக் கருத்துத் தெரிவிக்கையில்,

'யுத்தத்தின் பின்னர் மக்கள் எதிர்கொள்ளும் முதலாவது சம்பவமாக இது இருக்கிறது. இதனை இப்படியே விட்டுவிட்டால் அரசாங்கம் பாரிய நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும். இராணுவத்தினருக்கும்  மக்களுக்கிடையிலும் நல்ல உறவு நிலவ வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு அரசாங்கத்தின் மீது நம்பிக்கை ஏற்படும். அனைவரும் ஒன்றினைந்து இந்த விடயத்தில் கூடிய கவனம் செலுத்த வேண்டும்' என்றார்.

கைதடியைச் சேர்ந்த மாதர் சங்கத் தலைவியான என்.பத்மாதேவி இது குறித்து தெரிவிக்கையில்,  

'எங்களை வீடுகளுக்குள் முடக்கும் இந்த ஈனச்செயலை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். கிராமத்துப் பெண்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும். இந்த அரசாங்கம் பெற்றுத்தந்த சமாதானத்தை அவர்கள் ஏன் குழப்புகின்றார்கள் என்பது எமக்குப் புரியவில்லை. எங்களை நிம்மதியாக வாழவிடுங்கள்' என்றார்.

தன்னார்வ தொண்டு நிறுவனப் பெண் பிரதிநிதி கே.கோமதி தெரிவிக்கையில்,

திட்டமிட்டு பெண்களை இலக்கு வைக்கும் இந்த நடவடிக்கையை அரசாங்கம் கட்டுப்படுத்த வேண்டும். எங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு இந்த அரசாங்கம் தயாராக இருக்க வேண்டும். மக்களின் பாதுகாப்பிற்கு இராணுவத்தினர் இருக்கின்றனர். ஆனாலும் எங்களால் இரவில் நிம்மதியாக உறங்க  முடியவில்லை. தயவு செய்து இந்த இனந்தெரியாத நபர்களின் நடமாட்டம் குறித்து அரசாங்கம் தலையிட்டு பிரச்சினைகளை தீர்க்க வேண்டும்' என்றார்.

சமாதானத்திற்கும் நல்லெண்ணத்திற்குமான தூதுக்குழுவின் தலைவர் என்.பரமநாதன் கூறுகையில்,

'யாழ்ப்பாணத்தின் இன்றைய சூழ்நிலையை புரிந்து கொண்டு மக்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கையினை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.
மக்களின் இந்தப் பிரச்சினைகளில் உரிய கவனம் செலுத்தி மக்களைப் பாதுகாப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்றார்
யாழ். வர்த்தக சங்கப் பிரதிநிதி என்.வர்ணகுலம் குறிப்பிடுகையில்,

இந்த இனந்தெரியாத நபர்களின் நடமாட்டம் குறித்து முறையிடுவதற்கு பொதுமக்கள் அஞ்சுகிறார்கள். அரசாங்க உத்தியோகத்தர்களிடம் இது தொடர்பாக முறையிட்டாலும் அவர்கள் தங்கள் பதவிகளைத் தக்கவைப்பதற்காக அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை முறையிடுவதில் பின்னிற்கிறார்கள். குறிப்பாக கிராம அலுவலர்கள் இந்த விடயத்தை கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டும் என்றார்
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X