2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

தந்தை செல்வாவின் சிலை உடைப்புக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும்: ஆனந்த சங்கரி

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 03 , மு.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி,நவரத்தினம்)

தந்தை செல்வாவின் சிலையை உடைத்தவர்களுக்கு அவரது அருமை பெருமை தெரியாது. அவரது சிலை உடைப்புக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்தசங்கரி நேற்று புதன்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

முன்பு ஒருபோதுமே இல்லாத அளவிற்கு இனத்துவேஷம் வளர்ந்துகொண்டே போகிறது. அமைச்சர்கள் சிலர் காலத்துக்குக் காலம் கக்கும் விஷத்தை அரசு முதலில் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். அத்தகைய விஷமே சிலரில் ஊறிப்போய் இனவெறியை உருவாக்குகின்றது. இத்தகைய இனவெறியாளர்களின் செயற்பாடுகள் மறுபுறத்தில் சிலரின் உள்ளத்தில் வெறி உணர்வுகளை ஏற்படுத்துமேயன்றி வேறு எதுவித பிரயோசனமும் ஏற்படாது.

சமாதானமான சூழ்நிலை இருக்கும்போது துவேஷம் கொண்ட ஒருவன் இத்தகைய ஒரு ஈனச்செயலை நாட்டின் எப்பகுதியிலும் செய்யலாம் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். முட்டாள்த்தனமான இதுபோன்ற செயல்களை நாட்டின் எப்பகுதியிலும் செய்யலாம் என்பதை அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும். இத்தகைய செயல்களே நாட்டில் அமைதி குறைவதற்கும் காரணமாகும்.

தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் பெயரில் ஒருவர் அமெரிக்கா சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை பதவியிறக்க வேண்டும் என்று அரசிற்கு உபதேசித்துள்ளார். தேசப்பற்று என்றால் என்ன என்பதைப்பற்றித் தெரியாதவர்கள் எல்லாம் தேசப்பற்று பற்றிப் பேசுவது வேடிக்கையே.

தேசவளமை என்றால் என்னவென்று தெரியாத அமைச்சர் நாட்டில் மழை பெய்தாலும் தேசவளமையை ஒழிக்க வேண்டும் என்பார். தேசவளமை, கண்டிய சட்டம், இஸ்லாமிய சட்டம் போன்றவை அந்தந்த இன மக்களைச் சார்ந்தவையாகும். அம்மக்களின் ஒத்தாசையின்றி அவற்றை மாற்றும் உரிமை யாருக்கும் இல்லை. பிற மாவட்டத்தவர்கள் யாழ்ப்பாணத்தில் காணி வாங்க முடியாது என்பது சிலரின் கற்பனையாகும்.

யாழ்ப்பாணத்தில் தேசவளமைப்படி கணவன் உயிருடன் இருக்கும்வரை மனைவி ஒரு 'மைனர்' அதாவது பிராயமடையாதவர் எனக் கணிக்கப்பட்டு சொத்துக்களை விற்பதற்கு கணவரின் சம்மதம் வேண்டும். பிற மாவட்டங்களில் வாழும் தமிழர்களுக்கு இக்கட்டுப்பாடு இல்லை.

கண்டியப் பெண் எவ்வாறு தன் இஷ்டப்படி தனது காணிகளை விற்கலாமோ அதேபோல் பிறமாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்ப்பெண்கள் செயற்பட முடியும். ஆனால் யாழ்ப்பாணத்தில் பெண் அவ்வாறு செயற்பட முடியாது. இவ்வாறு பல சிறப்பம்சங்கள், கட்டுப்பாடுகள் தேசவளமைக்கு உட்பட்ட பெண்களுக்கு உண்டு.

இத்தகைய தவறுதலான பிரச்சாரங்களே சிலருக்கு துவேஷத்தையூட்டுகின்றது. தந்தை செல்வாவின் சிலையை உடைத்தவன் பெரியவனாகிவிட முடியாது. தனது சின்னத்தனத்தைக் காட்டிவிட்டான் என்றே கூறலாம். ஒருசிலை உடைக்கப்பட்டால் பத்துசிலைகள் உருவாகும் என்பதை இவர்களுக்கு நம்மக்கள் உணர்த்த வேண்டும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X