2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

'முல்லைத்தீவு மாவட்டத்தில் சிங்கள நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை உருவாக்க அரசு முயற்சி'

Super User   / 2011 நவம்பர் 15 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

வெலிஓயா பிரதேசத்தில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை செய்து முல்லைத்தீவு மாவட்டத்தில் சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களை உருவாக்க அரசு முயற்சித்து வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தேர்தல் இடாப்பு திருத்தம் தொடர்பாக இன்று செவ்வாய்கிழமை யாழ். கிறின் கிளாஸ் விடுதியில் நடைபெற்ற கலந்துரையாடலில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

முன்னாள் பிரதமர் டட்லி சேனநாயக்கா காலத்தில் இருந்த திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் இன்று வட கிழக்கில் நடைபெற்று வருகின்றது. அரசின் தற்போதைய போக்கை பார்த்தால் தமிழர்களின் தாயக பூமியை சிங்கள மயமாக்கும் நடவடிக்கைகள் மறைமுகமாக நடைபெற்று வருகிறன.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களை தனியான தேர்தல் மாவட்டங்களாக்கி அதில் சிங்கள மக்களை குடியேற்றி எதிர்காலத்தில் முல்லைத்தீவில் இருந்து சிங்கள நாடாளுமன்ற பிரதிநித்துவத்தை உருவாக்கும் முயற்சிகள் மிகக் கச்சிதமாக நடைபெற்று வருகின்றன என்றார்.

இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் உரையாற்றுகையில்,

வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்களின் பெயர்கள் தேர்தல் இடாப்பில் இருந்து வெட்டப்படுகிறது. இது யாரால் வெட்டப்படுகிறது என்பது புதிரான புதிராக இருக்கிறது.

வடக்கு கிழக்கில் முன்னர் தேர்தல் இடாப்பில் இருந்தவர்களின் பெயர்கள் வெளிநாடுகளுக்கு சென்றவுடன் தேர்தல் இடாப்பில் இருந்து நீக்கப்படுகிறது.

அது குறித்து தேர்தல் திணைக்களத்திடம் கேட்டால் அவர்கள் தங்களுக்கு தெரியாது என பதில் அளிக்கின்றார்கள்
தமிழர்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை குறைத்து, தமிழர்களின் அரசியல் உரிமைகளை இல்லாமல் செய்வதற்கு அரசு திட்டமிட்டு சில கைங்காரியங்களை  செய்து வருவதாக குற்றஞ்சாட்டினார்.

இந்தக் கலந்துரையாடலில் உதவி தேர்தல்கள் ஆணையாளர் ஏம்.மொகமட், யாழ். மற்றும் கிளிநொச்சி உதவி தேர்தல் ஆணையாளர்கள், பெப்பரல் அமைப்பின் பிரதிநிதிகள், அரச சார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகள், பிரதேச சபை உறுப்பினர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X