2025 மே 17, சனிக்கிழமை

தமிழ் மக்களின் கண்ணீருக்கு நல்லிணக்க ஆணைக்குழு விடை தேடவில்லை

Kogilavani   / 2011 டிசெம்பர் 19 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(கிரிசன்)
'நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையானது தமிழ் மக்களின் கண்ணீருக்கு விடை தேடவில்லை. பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் ஆணைக்குழு முன்னிலையில் தமது துன்ப துயரங்களை கொட்டித் தீர்த்திருந்தனர். ஆனால் அறிக்கையில் அதற்கான விடை முழுமையாக வழங்கப்படாமை கவலைக்குரிய விடயமாகும்' என்று சிறீரெலோ கட்சியின் தலைவர் ப. உதயராசா தெரிவித்துள்ளார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது,

அரசாங்கத்தினால் நல்லிணக்க ஆணைக்குழு கடந்த வருடம் அமைக்கப்பட்ட போது மாவட்டங்கள் தோறும் விசாரணைகள் நடத்தப்பட்டன. இதன்போது ஆணைக்குழு முன் தோன்றிய பாதிக்கப்பட்ட பொது மக்கள் பலரும் துயரங்களை கொட்டித் தீர்த்திருந்தனர். தாம் பட்ட துன்பங்களுக்கு ஆணைக்குழு உரிய பரிகாரம் காணும் என்ற நம்பிக்கையே மக்கள் மத்தியில் காணப்பட்டது.

ஆனால், தற்போது ஆணைக்குழுவின் அறிக்கையில் தமிழ் மக்கள் எதிர்பார்த்திருந்த பரிகாரங்கள் முழுமையாகக் கிடைக்கவில்லை. இது பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் மத்தியில் மன காயத்தினை ஏற்படுத்தியுள்ளது. ஒருசில விடயங்களில் நல்லிணக்க ஆணைக்குழுவானது உரிய பரிந்துரைகளை வழங்கியுள்ள போதிலும் தமிழ்மக்கள் எதிர்பார்த்திருந்த முக்கிய விடயங்களில் உரிய தீர்வினை   வழங்கவில்லை. இது தமிழ் மக்களை ஏமாற்றத்திற்குள் தள்ளியுள்ளது.

ஆணைக்குழுவின் அறிக்கையினை சர்வதேச மன்னிப்புச்சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் என்பனவும் விமர்சித்துள்ளன. இந்த நிலையில் தமிழ் மக்கள் பட்ட துன்பதுயரங்களுக்கு விடிவினை ஏற்படுத்தும் வகையில் அரசாங்கம் செயற்படவேண்டிய தேவை எழுந்துள்ளது.

தமிழ் மக்களின் கண்ணீருக்கு விடைகூற தவறியிருக்கும் ஆணைக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளையாவது அரசாங்கம் அமுல்படுத்துவதுடன் அதற்கு மேல் சென்றும் உரிய தீர்வுகளைக் காண முயல வேண்டும். இதன் மூலமே தமிழ் மக்களின் மனங்களை வெல்ல முடியும் என தெரிவித்துள்ளார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .