2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

'திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இரு வாரத்திற்குள் கைதுசெய்யப்படுவார்கள்'

Suganthini Ratnam   / 2012 மே 06 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கிரிசன்)

யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையதாக கருதப்படும்  சந்தேக நபர்கள் இன்னும் இரு வார காலத்திற்குள் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படுவார்களென வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி டி சில்வா தெரிவித்தார்.

வடமாகாணத்தில் இடம்பெறுகின்ற குற்றச்செயல்கள் தொடர்பில் ஊடகங்கள் தவறாக பொதுமக்களுக்கு தகவல்களை வழங்குவதாக கூறி யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் நேற்று சனிக்கிழமை  ஊடகவியலாளர்களுடனான சந்திப்பொன்று நடைபெற்றது. இதன்போது அண்மையில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

'யாழ்ப்பாணத்திலும் ஏனைய இடங்களிலும் இடம்பெறுகின்ற திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில்  பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் எந்தவகையான தொடர்புகளும் கிடையாது. இத்திருட்டுச் சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் வெகு விரைவில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்படும்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற குற்றச்செயல்களில் 77 சதவீதமானவை எம்மால் கண்டுபிடிக்கப்பட்டு குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டனர். காதலர்கள் வீடுகளை விட்டுச் செல்வதையும்; சில ஊடகங்கள் கடத்தப்பட்டதாக கூறுகின்றனர்.  நிகழ்வுகளுக்குரிய சொற்பதங்களை ஊடகங்கள் உரிய முறையில் பயன்படுத்தி செய்திகளை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். குழப்பமான முறையில் செய்திகள் வெளிவருவதினால் பொதுமக்களும் பொலிஸாரும் சிரமங்களுக்கு  உள்ளாகும் நிலைமை ஏற்படுகின்றது.

வடமாகாணப் பொலிஸ் நிலையங்களில் 500க்கும் மேற்பட்ட தமிழ் பொலிஸார் கடமைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் தமிழில் பதிவு செய்யப்படுவதுடன் நீதிமன்றத்தில் வழக்குகளும் தமிழ்மொழியில் தாக்கல் செய்யப்படுகின்றன.
பொதுமக்கள் தமது பிரச்சினைகளை உடனடியாக பொலிஸ் நிலையங்களில் முறையிடலாம். தற்போது சிவில் பாதுகாப்புக் குழுக்கள் நல்லமுறையில் இயங்கிவருவதுடன், குற்றச்செயலகள் இடம்பெறும் சந்தர்ப்பங்களில் பொதுமக்களும் சிவில் பாதுகாப்புக்குழுக்களும் உடனடியாக கையடக்கத் தொலைபேசிகள் மூலம் பொலிஸாருக்கு தகவல்களை வழங்குவதினால் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தக் கூடியதாகவுள்ளது.

பொதுமக்கள் தற்போது அச்சமின்றி வாழக்கூடியதாகவுள்ளது. யாழ்ப்பாணத்திற்கு தமிழ் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நியமிக்கப்பட்டுள்ளார். கிராம மட்டங்களில் பொலிஸார் நடமாடும் சேவைகளை நடத்துகின்றனர். இதனால் பொதுமக்கள் பெருமளவில் நன்மையடையக் கூடியதாகவுள்ளது.

கடந்த சில மாதங்களில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்களென தெரிவிக்கப்படும் 15க்கும் மேற்பட்டவர்களை கைதுசெய்து நீதிமன்றத்தில் நிறுத்தியுள்ளோம். இத்தகைய நடவடிக்கைகளை கட்டுப்படுத்த ஊடகவியலாளர்களும் பொதுமக்களும் முழுமையாக ஒத்துழைக்க வேண்டியது அவசியமாகும்' என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X