2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

பல்கலை மாணவர்கள் மீதான தாக்குதலை த.தே.கூ வன்மையாக கண்டிக்கின்றது: செல்வம் எம்.பி

Kogilavani   / 2012 நவம்பர் 29 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                                           (எஸ்.ஜெனி)
யாழ். பல்கலைக்கழக விடுதியினுள் இராணுவத்தின் அத்துமீறிய நுழைவு மற்றும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது மாணவர்கள் தாக்கப்பட்டமை ஆகியவற்றை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் டெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமிழ் மக்கள் மீதான அடக்கு முறைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இதன் ஒரு அங்கமாகவே யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவமும் அமைந்துள்ளது.

கடந்த 27 ஆம் திகதி மாவீரர் தினமன்று யாழ்.பல்கலைக்கழக மாணவர் விடுதியினுள் அத்து மீறி நுழைந்த ஆயிரக்கணக்காண இராணுவத்தினரும் பொலிஸாரும் அங்கு மாணவர் விடுதியினை சேதப்படுத்தியதோடு மாணவர்களையும் அச்சுருத்தியுள்ளனர்.

இந்த நிலையில் அந்த மாணவர்களுக்காக ஆதரவு தெரிவித்து அங்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனை கற்களை எறிந்து தாக்க முயற்சித்ததோடு ஊடகவியலாளர் ரீ.பிரேமானந்த மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் காயமடைந்த ஊடகவியலாளர் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகிறார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது இராணுவத்தினரும் பொலிஸாரும் கண்மூடித்தனமான முறையில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த பல மாணவர்கள் யாழ்.வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கலவரத்தை பார்வையிடுவதற்காக மீண்டும் யாழ்.பல்கலைக்கழகத்திற்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனின்  வாகனம் அங்கு இராணுவத்தினருக்கு முன்னால் வைத்து சந்தேக நபர்களினால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவங்களுக்கு இராணுவம் ஆதரவாக காணப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்களை அடக்கி ஆழ நிணைக்கும் படையினர் இவ்வாறான கலவரங்களை ஆரம்பித்து பலி தீர்க்க முனைகின்றனர்.

குறித்த சம்பவங்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றது.

இந்த சம்பவத்திற்கு எதிராக சர்வதேசத்தின் ஆதரவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்பார்த்து நிற்பதோடு இந்த சம்பவத்திற்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பு சில தினங்களில் பாரிய ஆர்ப்பாட்டங்களை நடத்தவுள்ளதாகவும் தமிழ் தேசியக்  கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X