2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

யாழில் எஞ்சியிருக்கும் ஒரேயொரு ரிக்ஸா வண்டி சவாரி

Kogilavani   / 2013 ஜனவரி 11 , மு.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}



- கு.சுரேன்


'நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம்' என்று சொல்லும் அளவுக்கு ரிக்ஸா வண்டி வழக்கொழிந்து போய்விட்டது. யாழில் 1995 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்தில் ரிக்ஸா வண்டி அதிகமாக காணப்பட்டது.

தற்போது, முச்சக்கரவண்டி பயணங்கள் அதிகரித்து வந்த நிலையில் 'ரிக்ஸா வண்டி' தேவையை மக்கள் விரும்பவில்லை. இந்நிலையில் சைக்கிள் ரிக்ஸா வழக்கொழிந்துவிட்டது.

இருந்தும் தற்போது யாழ்ப்பாணத்தில் ஒரேயொரு ரிக்ஸா வண்டி மட்டும் பாடசாலை மாணவர்களை ஏற்றி இறக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றது. 65 வயதான ஆர்.ஜயம்பிள்ளை என்பவரே இச் சைக்கிள் ரிக்சாவின் உரிமையாளர் ஆவார்.

சைக்கிள் ரிக்ஸா தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

'1995 ஆம் ஆண்டுக்குப் பின்பு நானும் எனது நண்பர் வில்லியம்ஸும் மட்டும்தான் இந்த பணியில் ஈடுபட்டு வந்தோம். வில்லியம்ஸ் உடல்நிலை பாதிப்படைந்ததால் தற்போது நான் மட்டுமே ரிக்சா ஓட்டி வருகின்றனர்.

தற்போதைய வாழ்க்கை நிலைமையில் யாரும் ரிக்ஸா வண்டியில் பயணம் செய்வதை விரும்பவில்லை.  நான் 1995 ஆம் ஆண்டுக்கு முன்னர் ரிக்ஸா வாகனத்தில் ஏற்றிய பாடசாலை மாணவர்களின் பிள்ளைகளே தற்போது எனக்கு சவாரியாக வருகின்றனர். புதிதாக வாடிக்கையாளர்கள் எவரையும் பெற முடிவதில்லை.

பாடசாலைகள் மாணவர்களை ஏற்றி இறக்குவதற்கு மாதாந்தம் ரூபா 2500 வரையும் அறவிடுகிறேன். புதிய ரிக்ஸா வண்டி ஒன்றை தற்போது உருவாக்கி வருகின்றேன்' என்றார்.

தரம் 10 வரையும் கல்விகற்றுள்ள இந்த ஜயம்பிள்ளை, ஆங்கிலத்தில் சரளமாக உரையாடும் ஒருவர். இதனால், இடைக்கிடையில் யாழ்ப்பாணம் வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் சவாரியும் கிடைக்கின்றது என்றார்.

வயதான பிரச்சினையால் தனது ரிக்ஸா வண்டியில் மின்மோட்டர் ஒன்றும் பொருத்தியுள்ளதாகவும், இருந்தும் அதனை தான், எப்போதாவது ஒரு தடவை மட்டும் பாவிப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X