2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

இந்தியப் பிரதமர் வருகை தராதது தமிழ்மக்களுக்கே பேரிழப்பு : டக்ளஸ்

Kogilavani   / 2013 நவம்பர் 15 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமித்தி தங்கராசா

'இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் இலங்கைக்கு வருகை தராதது இலங்கைத் தமிழ் மக்களுக்கே பாரிய இழப்பாகுமென்பதுடன், அரசாங்கத்திற்கு இதனால் எவ்வித பாதிப்பும் இல்லை' என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'இந்திய பிரதமர் மன்மோகன்சிங் இலங்கைக்கு வருகை தந்திருந்தால் தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கை வலிமை பெற்றிருக்கும். அத்துடன் வீட்டுத்திட்டங்கள், யுத்தத்தினால் அழிவடைந்த எமது பகுதிகளை விரைவாக மீளக்கட்டியெழுப்புவதற்கான உட்கட்டுமானங்கள், தொழிற்துறை வளங்கள் மற்றும் பொருளாதார உதவிகளுக்கான மனிதாபிமான கோரிக்கையை அவரிடம் முன்வைத்திருக்கமுடியும்.

இலங்கை - இந்திய ஒப்பந்தத்திற்குப் பின்னர் இலங்கைத் தமிழ் மக்களுக்கு கிடைக்கவிருந்த சிறந்தவொரு சந்தர்ப்பம் தற்போது தவறிப்போயுள்ளது.

மன்மோகன்சிங் இலங்கை விஜயத்தை அரசியல் ஆர்வலர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்தார்கள். அவர் வருகை தரமாட்டார் என்ற செய்தி தமிழ் மக்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.

இந்தியப் பிரதமர் இலங்கைக்கு வரவிடாமல் தடுத்துவிட்டதாக பெருமைகொண்டாடும் தமிழ்நாட்டின் சில அரசியல்வாதிகளும் அவர் வருகை தராதது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறும் இலங்கையிலுள்ள சில தீயசக்திகளும் 'அவலை நினைத்துக் கொண்டு உரலை இடித்திருக்கின்றார்கள்'

மன்மோகன் சிங் இலங்கைக்கு வருகை தந்திருந்தால் 13ஆவது திருத்தச் சட்டத்தை மேலும் செழுமைப்படுத்தும் இந்தியாவின் நிலைப்பாட்டை சர்வதேச அரங்கில் வலியுறுத்தி, தமிழ்மக்களின் அரசியல் அபிலாiஷகளுக்கு சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுக்கொடுத்திருப்பார்.

போருக்குப் பின்னரான தமிழ்மக்களின் நிகழ்கால நிலைமைகளையும் சவால்கள் நிறைந்த எதிர்காலம் தொடர்பாகவும் நேரடியாகத் தெரிந்து கொள்வதோடு, அதற்கு இந்திய மத்திய அரசு எந்தவகையில் உதவ முடியும் என்பதையும் தீர்மானிப்பதற்கான வாய்ப்பும் ஏற்பட்டிருக்கும்.

கடந்த காலத்திலும் பல நல்ல வாய்ப்புக்களை தமிழ் மக்கள் இழந்துபோனதுக்கு காரணமாக இருந்தவர்களே இப்போதும் தமிழ் மக்களுக்கு ஏமாற்றங்களை பரிசளித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இத்தகைய செயற்பாடுகள் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வொன்று கிடைத்துவிடக்கூடாது என்று விரும்புகின்றவர்களுக்கு துணைபோவதாகவே அமைந்துள்ளது. தமிழ் மக்களை தொடர்ந்தும் அரசியல் அநாதைகளாக வைத்துக் கொண்டிருப்பதன் ஊடாக தமது சுயலாப அரசியலை செய்யவே இவர்கள் விரும்புகின்றார்கள்.

அரச தலைவர்கள் இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பில் எதைக் கூறினாலும், இந்திய மத்திய அரசின் பங்களிப்பும் உதவிகளுமே இலங்கை தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைகளுக்கு தீர்வுக்கும், மீள் எழுச்சிக்கும் பலம் சேர்ப்பதாக அமையும் என்பதே எமது நம்பிக்கையாகும்.' என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X