2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

இடம்பெயர் மக்கள் சொந்த இடங்களில் மீள்குடியேற விரும்புகின்றனர்: பெயானி

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 04 , மு.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா, எஸ்.கே.பிரசாத்

இடம்பெயர்ந்த மக்கள் தங்களது சொந்த இடங்களில் மீள்குடியேறுவதற்கு விரும்புகின்றனர்.  இந்த நிலையில், இங்கு நான் கண்டறிந்த விடயங்களை இலங்கை அரசாங்கத்திற்கு தெரியப்படுத்துவதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகத்தின் சிறப்புப் பிரதிநிதி சலோகா பெயானி தெரிவித்துள்ளார்.

யாழ். மல்லாகம்  கோணாப்புலம் நலன்புரி நிலையத்தில் உள்ள  மக்களை நேற்று செவ்வாய்க்கிழமை  பிற்பகல் சந்தித்துக் கலந்துரையாடியபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இந்தச் சந்திப்பின்போது,   எங்களது  சொந்த இடங்களில் மீள்குடியேறுவதற்கு நாங்கள் விரும்புவதுடன்,  எங்களது  பிள்ளைகளுக்கு எங்களுடைய காணிகளை காட்டுவதற்கும் நாங்கள்  விரும்புகின்றோம்.  எங்களது  பிள்ளைகளுக்கு எங்களது உரித்தான காணிகள் எதுவெனத் தெரியாதுள்ளது எனவும் கோணாப்புலம் நலன்புரி நிலையத்தில் உள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.  

மேலும்,  எங்களது  வீடுகள் உடைக்கப்படுவதாகவும் நாங்கள்  அறிகின்றோம். எங்களை மீள்குடியேறுவதற்கு  விட்டால் போதும். நாங்கள் கொட்டில்கள்  போட்டாவது எங்களது இடங்களில் மீள்குடியேறுவோம் என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகத்தின் சிறப்புப் பிரதிநிதி சலோகா பெயானியிடம் இந்த மக்கள் கூறியுள்ளனர்.

இந்த மக்களுடன் உரையாடிய பெயானி,

நீங்கள் 23 வருடங்களுக்கும் மேலாக இடம்பெயர்ந்து இங்கு வாழ்கின்றீர்கள் என்று நான்  நினைக்கின்றேன். உங்களது  பிரச்சினைகள் எவ்வாறு தீர்க்கப்படலாம் என்பது தொடர்பாகக் கேட்டறிந்து கொள்வதற்காகவே நான் நேரடியாக இங்கு வருகை தந்துள்ளேன்.

இடம்பெயர்ந்த மக்களைப் பார்வையிடுவதற்காக  நான் ஜோர்சியா, தெற்கு சூடான் போன்ற நாடுகளுக்கும் சென்றிருந்தேன். அங்குள்ள இடம்பெயர்ந்த மக்கள் கோபமாக பேசுவதுடன், மிகவும் பாதிக்கப்பட்ட நிலையிலும் இருக்கின்றார்கள்.

இடம்பெயர்ந்து வாழ்கின்ற மக்களைப் பார்வையிட்டு அவர்களின் உண்மை நிலவரங்களை அறிவதற்காகவே நான் வருகை தந்துள்ளேன்.  இவ்வாறு மக்களின் நிலைமைகளை ஆராய்வதன் மூலம் பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்கலாம் என்றும் எவ்வாறு முன்னேற்றங்களை எட்டலாம் என்றும் அறியமுடியும்.

நீங்கள் உங்களது சொந்த இடங்களில் வாழ்வதற்கே விரும்புகின்றீர்கள் என்ற உண்மையை நான் இங்கு கண்டறிந்துள்ளேன். அந்த வகையில், இந்த விடயங்களை இலங்கை அரசாங்கத்துக்கு தெரியப்படுத்தி இதற்கான தீர்வு வழங்குமாறு அரசாங்கத்திற்கு கூறுவேன் என்று தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X