2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

உள்ளுராட்சி சபைகளின் நடவடிக்கைகளை விசாரிக்க விசாரணை குழு

Super User   / 2014 ஜனவரி 09 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன்

யாழ். மாநகர சபையினால் மேற்கொள்ளப்பட்டு வந்த ஆளணி சேர்ப்பு மற்றும் மாநகர சபையின் கடைகளின் கேள்வி கோரல் நடவடிக்கையிலுள்ள முறைக்கேடுகள் தொடர்பான விசாரணைகளுக்கும் மற்றும் உள்ளூராட்சி சபைகளில் மேற்கொள்ளப்படும் ஆளணி நியமனங்கள் தொடர்பிலும் விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படுவதிற்கு வட மாகாண சபையில் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

மாநகர சபைக்கு எதிராக விசாரணைக்குழு அமைக்கப்பட வேண்டுமென அரியகுட்டி பரஞ்சோதியினால் 3ஆவது அமர்வில் பிரேரணை கொண்டுவரப்பட்டு அது சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. எனினும், அது இன்று வரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் மாநகர சபையில் 161 பேர் புதிதாக ஆளனியினால் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இவர்களில் பலர் ஆளுங் கட்சியிலிருக்கும் உறுப்பினர் ஒருவரால் கையூட்டு வழங்கி சேர்த்துக்கொள்ளப்பட்டதாக விந்தன் கனகரத்தினம் சபையில் தெரிவித்தார். அத்துடன் மாநகர சபையினால் யாழ். நகரத்திலுள்ள கடைத்தொகுதிகள் பல கறுப்புச் சந்தையில் எந்தவித கேள்வி ஏலமுமின்றி விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாநாகர சபையின் வருமானங்கள் பாதிக்கப்பட்டதுடன், மக்கள் நலன் பணிகள் முன்னெடுப்பதிலும் முடியாது போகும் என விந்தன் கனகரத்தினம் மேலும் தெரிவித்தார். மேலும், ஆளணி நியமனங்கள் தொடர்பில் சரியான முறையில் நியமனங்கள் வழங்கப்படவில்லையென என்றும் இது தொடர்பிலும் விசாரணைகள் வேண்டுமெனவும் பரஞ்சோதி நேற்று வலியுறுத்தினார்.

அத்துடன், மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசாவுடன் தான் கதைத்தபோது, 'மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாக செயற்படுத்த வேண்டும் என்பது தனக்குத் தெரியாது' என்று தெரிவித்ததாக என பரஞ்சோதி மேலும் தெரிவித்தார்.

'மாநகர சபையில் மட்டுமன்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சியின் கீழ் இருக்கும் வட மாகாணத்தின் அனைத்து உள்ளுராட்சி சபைகளிலும் விசாரணைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். ஏனெனில் அங்கும் ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளன' என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த தவிசாளர் சி.வீ.கே.சிவஞானம்,

'மாகாண சபைக்கு தெரியாமல் எந்தவித நடவடிக்கைகளும் எந்த உள்ளூராட்சி சபைகளும் ஈடுபடக் கூடாது.
அத்துடன் இதுவரையிலும் உள்ளூராட்சி சபைகளில் மேற்கொள்ளப்படும் ஆளணி நியமனங்கள் தொடர்பில் குழு அமைத்து மீளாய்வு செய்யப்பட வேண்டும் எனவும் இதற்கான நடவடிக்கைகளை குழு அமைத்து முதலமைச்சர் தனது தனித்துவத்தின் அடிப்படையில் மேற்கொள்வார்' என்றும் தெரிவித்திருந்தார்.

அத்துடன், மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னரும் ஆளனி சேர்ப்பில் ஈடுபட்ட மாநகர சபையின் நடவடிக்கை குறித்தும் கடிந்துகொண்டார்.

ஆளுநர் தொடர்பான விடயம்

வழமைகோல் இன்றைய அமர்விலும், வடமாகாண ஆளுநர் தொடர்பான விடயம் சூடு பிடித்தது. ஆளுநரை மாற்றவேண்டும் இது எல்லாவற்றிக்கும் காரணம் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி தான் என்று சபையில் சிவாஜிலிங்கம் பலமாகக் கத்தினார்.

எனினும், ஆளுநர் பற்றி சபையில் கதைக்கவேண்டாம் என தவிசாளர் எச்சரித்தார். அதற்கு சிவாஜிலிங்கம் 'ஆளுநர் பற்றி கதைக்காமல் ஆளுநரின் மலசலகூடம் பற்றிய நாம் இங்கு கதைப்பது என வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டார். இருந்தும், அதற்கு மீண்டும் பதிலளித்த தவிசாளர், 

"ஆளுநர் தொடர்பான விடயத்தினை முதலமைச்சர் படிமுறைகளாக முன்னெடுத்து வருகின்றார். இது தொடர்பாக அவர் கடந்த 2 ஆம் திகதி ஜனாதிபதியுடன் கதைத்தும் உள்ளார். ஆகவே ஆளுநர் தொடர்பான விடயங்கள் இங்கு கதைக்க வேண்டாம்" என கூறினார்.

அதற்கு மறுப்புத் தெரிவித்த சிவாஜிலிங்கம், "இந்த வட மாகாண சபையில் அரசியலமைப்பினூடாக ஆளுநரினை மாற்ற வேண்டும் என்று நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டு, அதனை இந்த சபையில் மூன்றில் இரண்டு பங்கு பெருன்பான்மையுடன் ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்போம் அப்போது ஜனாதிபதி என்ன செய்வார் என்று பார்ப்போம்" என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X