2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

அனைத்துக் கட்சிகளின் யோசனையே ஜனாதிபதியின் தீர்வு: பிரதமர்

Menaka Mookandi   / 2014 ஜனவரி 12 , பி.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா, எஸ்.ஜெகநாதன்

இனப்பிரச்சினைக்கு  தீர்வு காண்பதற்காகவே ஜனாதிபதியினால் நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் மூலம் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து இனப்பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடி அதன் போது மு;னவைக்கப்படுகின்ற யோசனையே இனப்பிரச்சனைக்கான ஜனாதிபதியின் தீர்வாக அமையும்' என்று பிரதமர் டீ.எம்.ஜயரட்ன தெரிவித்தார்.

பொங்கல் தினத்தை முன்னிட்டு யாழ். துர்க்கா மணிமண்டபத்தில் நடைபெற்ற முத்திரை வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர், 'பல கோடிக்கணக்கான தமிழ் மக்கள் வாழ்கின்ற இந்தியாவில் தனிநாடு கோராத நிலையில் 03 மில்லியன் தமிழர்கள் மாத்திரமே வாழும் இலங்கையில் தனிநாடு கோரிக்கை முன்வைக்கப்படுவதானது இனக் குரோதத்தையும் பிரிவினைவாதத்தையும் ஏற்படுத்தும்' என்று தெரிவித்தார்.

'இந்த நாட்டில் வாழுகின்ற இந்து மற்றும் பௌத்த மக்களின் கலாசாரம் ஒன்றாகவே இருக்கின்றது. இந்து மதமும் இந்தியாவில் இருந்தே தோற்றம் பெற்றது. பௌத்த மதமும் இந்தியாவிலிருந்தே தோற்றம் பெற்றது. நாங்கள் மொழி ரீதியாக வேறுபட்டாலும் வழிபாட்டு முறை, கலாசாரம், பண்பாடு ஆகியவற்றில் நாம் அனைவரும் ஒரே தன்மையைக் கொண்டவர்கள்.

அனைத்து இன மற்றும் மத மக்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று ஜனாதிபதி கடுமையாக உழைத்து வருகின்றார்.  தமிழர்கள்  சகல உரிமைகளும் பெற்று வாழ வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். அத்துடன், இங்கு பிரச்சினை இல்லையென்று நாம் சொல்லவில்லை.

இந்நாட்டில் வாழுகின்ற  மக்களிடம் பிரிவினைவாதத்தையும் குரோத்தையும் ஏற்படுத்த வெளிநாட்டுச் சக்திகள் சில முயற்சிக்கின்றன. அவ்வாறான பிரிவினைவாதிகள்  உருவாகுவதன் மூலம் எமது நாடு என்னவாகும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்' என்று பிரதமர் கூறினார்.

'இலங்கை ஒரு சிறிய நாடு. இந்த நாட்டில் 5 இனங்கள் வாழ்ந்து வருகின்றார்கள். இந்தியாவில்  பல கோடிக்கணக்கான மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்கள் பிரிவினை வாதத்தையோ தனிநாட்டையோ கோரவில்லை. ஆனால் இலங்கையில் 03 மில்லியன் மக்கள் வாழும் இந்த சிறிய நாட்டில் தனிநாட்டைக் கோருவது பிரிவினையையே ஏற்படுத்தும்.

இவ்வாறு எகிப்து மற்றும் சிரியா போன்ற நாடுகளின் தனிநாட்டுக் கோரிக்கையால் ஏற்பட்ட அழிவுகள் பற்றி நாங்கள் அறிந்துகொள்ள வேண்டும். கடந்த வாரம் மட்டும் சிரியாவில் சுமார் 80 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளார்' என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நாட்டில் நடைபெற்ற யுத்தத்திற்குப் பின்னர் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அரசாங்கம் பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. தொடர்ந்து இந்த அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படும். இதனை ஒருபோதும் நிறுத்தப்போவதில்லை' என்றும் அவர் தெரிவித்தார்.

'உலகில் தொண்மையான இந்துமதத்தவராகிய நீங்கள் புத்தி நிலையிலும் அறிவார்ந்த நிலையிலும் சிந்தித்து, நாம் அனைவரும் இலங்கையர் என்ற ரீதியில் தீர்வைப் பெற்றுக்கொள்ள உழைப்போம்' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

பிரதமரின் யாழ் விஜயத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .