2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

கணவனுக்காக ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்யவுள்ளேன்'

Kogilavani   / 2014 பெப்ரவரி 16 , மு.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சொர்ணகுமார் சொரூபன், செல்வநாயகம் கபிலன்


'1996 ஆம் ஆண்டு கடத்தப்பட்ட எனது கணவனைத் தேடி 18 வருடங்களாகத் அலைந்து திரியும் நான் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்யவுள்ளேன். ஆகையால் இந்த ஆணைக்குழு முன் சகல விடயங்களையும் தெரிவிக்கமாட்டேன். இதனால் என்னால் சட்ட ரீதியாகச் செல்ல முடியாத சூழ்நிலை உருவாகிவிடும்' என இன்று (15) சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் சாட்சியமளித்த காணாமற்போன ஒருவரின் மனைவியான பத்மினி ஸ்ரீஸ்கரன் தெரிவித்தார்.

காணாமற்போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின்முன் சாட்சியமளிக்கும் நடவடிக்கை நேற்று (14) முதல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வருகின்றது. இன்று (15) சாவகச்சேரியில் நடைபெறுகின்றது.
இதில் கலந்துகொண்டு சாட்சியமளிக்கும்போதே அப்பெண் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர்,
 
'1996 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி எங்கள் வீட்டில் வைத்து எனது கணவரைக் கடத்திச் சென்றனர். எனது கணவன் கடத்திச் செல்லப்பட்டு 18 வருடங்கள் கடந்துள்ளன. எனது கணவன் எங்கிருக்கின்றார் என்று எனக்குத் தெரியும். ஆனால் நான் இங்கு அதனைக் கூறமாட்டேன். அது பின் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்யும்போது எனக்குச் சட்டச் சிக்கல்கள் இருக்கின்றன.

நான் இது வரையிலும் பல விசாரணைகளுக்குச் சென்று வந்துவிட்டேன். என் கணவன் இன்னும் எனக்குக் கிடைக்கவில்லை. இங்கு சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளும் வந்திருக்கின்றார்கள். அவர்கள் இருக்கும் போது என்னால் சாட்சியமளிக்க முடியாது' எனத் தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த விசாரணைக்குழு ' நீங்கள் விரும்பினால் கொழும்பு வந்து நேரடியாக விசாரணைக்குழு முன்னிலையில் கணவர் தொடர்பான விபரங்களைக்கூற முடியும்' எனத் தெரிவித்தது.

அதற்கு பத்மினி கூறுiகையில் 'இது தொடர்பாக நான் எனது சட்டத்தரணியுடன் கலந்தாலோசித்துவிட்டே சொல்லவேண்டும். அத்துடன் இதனைத்தவிர வேறுவிடயங்களை நான் இங்குகூற விரும்பவில்லை நான் செல்கின்றேன். என்று சென்றுவிட்டார்.
என் கணவருடன் சேர்த்து 56 பேர் கொண்டு செல்லப்பட்டனர்

'1996 ஆம் இடம்பெற்ற இராணுவச் சுற்றிவளைப்பின் போதே எனது கணவர் மறவன்புலம் பகுதியிலுள்ள எங்கள் வீட்டில் வைத்து கைதுசெய்யப்பட்டு காணாமற்போனார். அவருடன் 56 பேர் அன்றைய தினம் பிடித்துச் செல்லப்பட்டனர்' என்று காணாமற்போன இராமநாதன் அன்னலிங்கம் என்பவரின் மனைவி அன்னலிங்கம் ஜெயகலா தெரிவித்தார்.

இவர் தொடர்ந்தும் சாட்சியமளிக்கையில்

'1996 யூலை மாதம் 19 ஆம் திகதி நாவற்குழு தொடக்கம் தனங்கிளப்பு வரையிலும் இடம்பெற்ற இராணுவச் சுற்றி வளைப்பில் 175 பேர் இராணுவத்தினரால் கொண்டு செல்லப்பட்டனர். இந்தச் சுற்றி வளைப்பிற்கு துமிந்த என்ற இராணுவ அதிகாரி தலைமை வகித்திருந்தார்.
என் கணவர் பிடிக்கப்பட்டு 3 தினங்களில் பின்னர் மறவன்புலம் பகுதியில் அமைந்துள்ள அரிசி ஆலையொன்றில் எனது கணவர் கறுப்புத் துணியினால் கட்டப்பட்டும், அவரது சேட்டியான கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் அவரைக் கண்டேன்.

தொடர்ந்து பிடிக்கப்பட்ட, 175 பேரில் 56 பேர் காங்கேசன்துறைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் அவர்களின் நிலைமை இன்று வரை தெரியாது என்றார். அதில் என் கணவரும் அடங்குவார் எனத் தெரிவித்தார்.

கடற்றொழில் மற்றும் சீவல் தொழில் ஈடுபட்டு வந்த எனது கணவன் கைதுசெய்து கொண்டு செல்லப்படும் போது 26 வயது என்றும் தெரிவித்தார்.
அதன்போது ஆணைக்குழு அதிகாரிகள் அப்பெண்ணிடம் 'உங்கள் கணவன் விடுதலைப் புலிகளுக்கு மீன்கள் அல்லது 'கள்'  கொடுத்தாரா' என்று கேட்டனர்.

அதற்குப் பதிலளித்த ஜெயகலா 'என் கணவன் அவ்வாறு செய்யவில்லை. பிடிக்கப்பட்டவர்களில் 17 வயது சிறுவன் ஒருவனும் இருக்கின்றான். அவனும் விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்தவன் என்று கூறுகின்றீர்களா?' என அப் பெண் ஆணைகுழு அதிகாரிகளிடம் அவர் கேள்வியெழுப்பினார்.  

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .