2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

'இனங்களுக்கிடையில் கசப்பான உணர்வுகளை ஏற்படுத்த மேற்குலகம் முயற்சி'

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 26 , மு.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

மனித உரிமை என்ற விடயத்தை முதன்மைப்படுத்தி இலங்கையில் இனங்களுக்கிடையில் பின்னடைவுகளையும் கசப்பான உணர்வுகளையும் ஏற்படுத்துவதற்கு மேற்குலக நாடுகள் முயற்சித்து வருவதாக  புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு பிரதியமைச்சர் சந்திரசிறி முத்துக்குமாரண தெரிவித்தார்.

யுத்தப் பாதிப்புக்குள்ளானவர்களுக்கான நட்டஈடு வழங்கும் நிகழ்வு யாழ். மாவட்டச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (25)  நடைபெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுககயில்,

'30 வருடகாலமாக இந்நாட்டில் பயங்கரவாதம் இருந்தது. இதனால் நாட்டிலுள்ள தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்களென  அனைவரும் பாதிப்புக்களை சந்தித்தனர்.

யுத்தம் முடிந்து அமைதியான சூழல் தற்போது ஏற்பட்டுள்ள நிலையில், எங்கள் பிரச்சினைகளுக்கு நாங்களே தீர்வு காண முயற்சிக்க வேண்டும். அவ்வாறு  அனைத்து இனங்களும் முயற்சிக்கும்போது, வெளியிலிருந்து வருகின்ற அச்சுறுத்தல்களை நாங்கள் தடுக்க முடியும்.

நாடு முழுவதிலும் அமைதியற்றதொரு சூழலில் மக்கள் அச்சத்துடன் வாழவேண்டிய நிலைமை ஒருகாலத்தில் இருந்தது. இந்நிலைமை தற்போது மாறியுள்ளது. இச்சூழலை நாங்கள் பாதுகாப்பாக மாற்ற வேண்டும்.

ஜனாதிபதி இந்நாட்டு மக்களின் இன ஐக்கியம் தொடர்பில் அக்கறையுடன் உள்ளார். அரசுக்கு எதிராக போராடியவர்களுக்கு புனர்வாழ்வளித்து  சமூகத்தில் அவர்களுக்கும் நல்ல சூழலை ஏற்படுத்துவதற்கு புனர்வாழ்வு அதிகாரசபையை உருவாக்கி அதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்ததுடன், புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்களுக்கு கடன் வசதியை ஏற்படுத்தி அவர்களின் பொருளாதார நிலையையும் ஏற்படுத்தினார்.

இன்று வழங்கப்படும் நட்டஈடானது யுத்தத்தில் நீங்கள் இழந்தவற்றுக்கு ஈடாகாது. இதனை நாங்கள் நியாயப்படுத்தவில்லை. இருப்பினும், உங்களது பொருளாதார மேம்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமென நினைக்கிறேன்.

யுத்தத்தினால்  அழிவுகளைச் சந்தித்த நாடு. தொடர்ந்து இன்று அபிவிருத்தி பாதையில் முன்னேற்றம் காண்கிறது. அபிவிருத்தி விடயத்தில் கூட ஜனாதிபதி பாரபட்சமற்ற நடவடிக்கையை முன்னெடுக்கிறார். தெற்கின் அபிவிருத்தி எவ்வாறு உள்ளதோ, அவ்வாறே  வடக்கின் அபிவிருத்தியும் முன்னெடுக்கப்படுகிறது. குறிப்பாக,  இன்று வடக்கில் பிரதான வீதிகளெல்லாம் திருத்தப்பட்டு பொதுமக்களின் போக்குவரத்து தெற்கை போன்று இலகுபடுத்தப்பட்டுள்ளது' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .