2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

மனிதாபிமான யுத்தம் என்ற ஆயுதமுனையில் பெண்கள் அனுபவித்த துன்பங்கள் அதிகம்: அனந்தி

A.P.Mathan   / 2014 மார்ச் 08 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்
 
சமாதானத்திற்கான யுத்தம், மனிதாபிமான நடவடிக்கை என்ற பெயர்களில் இலங்கை அரசு மேற்கொண்ட ஆயுதமுனையிலான நடவடிக்கைகளின் போது தமிழ்ப் பெண்கள் அனுபவித்த கொடுமைகள் சொல்லில் அடங்காதவையென வடமாகாண சபை உறுப்பினா அனந்தி சசிதரன் தெரிவித்தார்.
 
சர்வதேச மகளிர் தினமான இன்று (08), மகளிர் தினம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
 
'உலகெங்கும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளும் அதிகரித்து வரும் சூழ்நிலையில் சர்வதேச மகளிர் தினம் இன்று (08) அனுஷ்டிக்கப்படுகின்றது.
 
உலகம் அறிவியல் ரீதியில் உச்சங்களை தொட்டு வரும் நிலையில், பரந்த அளவில் பெண்களுக்கு எதிரான ஒடுக்கு முறைகளும், கீழ்த்தரமான அவமதிப்பு செயற்பாடுகளும் தீவிரமாகி வருவதை ஊடகங்கள் ஊடாக அறியும் போது, நாம் உண்மையில் பகுத்தறிவுச் சிந்தனையை தொலைத்து வழுகின்றோமா என்ற கேள்வி எழுவதை தடுக்க முடியாதுள்ளது.
 
உலக இயக்கத்தின் அனைத்து வடிவங்களிலும் பெண்களின் ஆற்றலும், பங்கும், ஆண்களுக்கு நிகராக வளர்ச்சி கண்டு வரும் அதே சூழலில், அவர்களை ஒரு சமநிலைத் திறன் கொண்ட பிறவிகளாக அங்கீகரித்து மதிப்பளிக்க மறுப்போரை மனித இனத்தவராக கணிக்க இயலாமல் இருப்பது வேதனை தரும் விடயமே.
 
குறிப்பாக இலங்கையில் சுதந்திரத்திற்கு பின்னரான காலங்கள் பெண்கள் பிரதமராகவும்  ஜனாதிபதியாகவும் பதவி வகித்தார்கள் என்று பீற்றிக்கொண்டாலும்கூட பெண்களுக்கான மனிதஉரிமை சமநிலை என்பது அதன் அர்த்தபூர்வமான அந்தஸ்தை ஒருபோதும் எட்டியது இல்லை. குறிப்பாக சமாதானத்திற்கான யுத்தம், மனிதாபிமான நடவடிக்கை என்ற பெயர்களில் இலங்கை அரசு மேற்கொண்ட ஆயுதமுனையிலான நடவடிக்கைகளின் போது தமிழ் பெண்கள் அனுபவித்த கொடுமைகள் சொல்லும் தரமன்று.
 
இது உலகறிந்த விடயமேயாகும். இன்று இந்த நாட்டில் பெண்களுக்கான அங்கிகாரம், பாதுகாப்பு மற்றும் சுதந்திர செயற்பாடு என்பதெல்லாம் மகளிர் தின நாளில் வெறும் கோஷங்களாகவே உள்ளமை வேதனையளிக்கின்றது.
 
எனவே, எமது பெண்களின் மானுட விடுதலை என்பதை நோக்கிய போராட்டமானது ஒரு வலிமையான சக்தியாக உருப்பெறும் போதே மகளிர் தினத்தை கொண்டாடுவது அர்த்தமுள்ளதாக இருக்கும் என அந்த அறிக்கையில் அனந்தி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .