2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

கைதடியில் கைப்பணி கிராம அமைவிடம் தொடர்பில் ஆராய்வு

Menaka Mookandi   / 2014 மார்ச் 16 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


கைதடியில் புதிதாக அமையப்பெறவுள்ள கைப்பணி உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் கிராமத்தின் அமைவிடம் தொடர்பில் பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று ஆராய்ந்தார்.

கைதடியில் அமைந்துள்ள பனை ஆராய்ச்சி நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள மேற்படி பகுதிக்கு அமைச்சர், சனிக்கிழமை (15) நேரில் விஜயம் மேற்கொண்டு ஆராய்ந்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர், 'அமையப்பெறவுள்ள இக்கிராமத்தில் 12 காட்சிக்கூடங்களும், 20 உற்பத்திக் கூடங்களும் அடங்குகின்றன.

இதற்காக தென்மராட்சி பிரதேச செயலகத்தினால் எட்டுப் பரப்புக் காணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அமைவிடம் தொடர்பில் நான் துறைசார்ந்தோருடன் கலந்துரையாடி கேட்டறிந்து கொண்டேன்.

இக்கிராமத்தில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழான தேசிய அருங்கலைகள் பேரவை, தேசிய வடிவமைப்பு நிலையம், பனை அபிவிருத்தி சபை, கைத்தொழில் அபிவிருத்தி சபை ஆகியவற்றின் தொழிற்துறைசார்ந்தோரால் வடிவமைக்கப்பட்ட ஆக்கப் பொருட்கள் காட்சிப்படுத்தப்படும் அதேவேளை, விற்பனை செய்யப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதற்காக இந்திய உதவித் திட்டத்தின் கீழ் 20 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ள அதேவேளை, கட்டுமானப் பணிகள் யாவும் ஆறுமாத காலத்திற்குள் நிறைவு பெறவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதன்போது, சாவகச்சேரி பிரதேச செயலர் திருமதி அஞ்சலிதேவி சாந்தசீலன் உடனிருந்தார். 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .