2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

பல்கலைக்கழத்திற்குள் இராணுவம், பொலிஸ் உள்நுழையாது: உதயபெரேரா

Kogilavani   / 2014 மே 08 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்திற்குள் மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் உள்நுழைவதனை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திடம் யாழ். மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதி உதய பெரேரா உறுதியளித்துள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர், பீடாதிபதிகள், சிரேஷ்ட மாணவ ஆலோசகர்கள், மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் மற்றும் யாழ். மாவட்ட படைகளின் தளபதிக்கு இடையிலான கலந்துரையாடல் காங்கேசன்துறையில் அமைந்துள்ள தல்செவன விருந்தினர் விடுதியில் புதன்கிழமை (07) நடைபெற்றது.

இதன்போது, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளை அச்சுறுத்தும் வகையில் ஒட்டப்பட்ட துண்டுப்பிரசுரம் மற்றும் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

பல்கலைக்கழக மாணவர்கள் பலரும் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்துள்ளதால் அவர்களை நினைவுகூர்ந்து பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் துக்க தினத்தினை அனுஷ்டிக்க அனுமதிக்கும்படி மாணவர் ஒன்றியத்தினர் கேட்டிருந்தனர்.

எனினும் அதற்கு இராணுவத்தளபதி, கூட்டமாகச் சேர்ந்து அனுஷ்டிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. தனித்தனியாக நீங்கள் உங்கள் வீடுகளில் அனுஷ்டிக்கலாம் எனவும் தெரிவித்தார்.

அத்துடன், மாணவர்கள் கல்வியில் அக்கறை செலுத்தவேண்டுமே தவிர அரசியல் விடயங்களில் உள்நுழைய வேண்டாம் எனவும் உதய பெரேரா, மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

மேலும், பல்கலைக்கழக மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் பல்கலைக்கழத்திற்கோ அல்லது விடுதிகளுக்கோ இராணுவத்தினர் உள்நுழையாமல் இருக்க தான் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .