2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

தீவகக் கல்வி வலய மாணவர்களுக்கு வெளிக்களப்பயிற்சி

Suganthini Ratnam   / 2014 ஜூன் 06 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


உலக சுற்றுச்சூழல் தினம் மற்றும் வடமாகாண சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வார நிகழ்வுகளை முன்னிட்டு யாழ். தீவகக் கல்வி வலய மாணவர்களுக்கு மண்டைதீவு கண்டற்காட்டில் வெளிக்களப்பயிற்சி நேற்று வியாழக்கிழமை நடத்தப்பட்டது.

வருடம் தோறும் ஜுன் மாதம்  5ஆம் திகதி உலக சுற்றுச்சூழல் தினம் ஐக்கிய நாடுகள் சபையால் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி ஜுன் 5ஆம் திகதியிலிருந்து 11ஆம் திகதிவரை வடமாகாண சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வாரமாக பிரகடனப்படுத்தியிருந்த வடமாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை  அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சு அதற்கான நிகழ்வை  மண்டைதீவு தெருவெளிப் பிள்ளையார் கோவிலுக்கு அருகிலுள்ள கண்டல்நிலச் சூழலில் நடத்தியது.

இதற்காக தீவகக் கல்வி வலயத்தின் பல்வேறு பாடசாலைகளிலிருந்தும் 100 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அழைக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கு சூழல் பாதுகாப்பு மற்றும் கண்டற்காடுகள் தொடர்பான கற்றல் குறிப்பேடுகளும் சூழல் விழிப்புணர்வு விபரணத் திரைப்பட இறுவெட்டும் வழங்கப்பட்டன.

விவசாய அமைச்சின் செயலாளர் யு.எல்.எம்.ஹால்தீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், யாழ். பல்கலைக்கழக விவசாயபீட பேராசிரியர் கலாநிதி  கு.மிகுந்தன், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வடமாகாண பிரதிப்பணிப்பாளர்  விஜிதா சத்தியகுமார்  ஆகியோர் கலந்துகொண்டு கண்டல் தாவரங்கள், தீவுகளின் பாதுகாப்பு,  பொருளாதாரத்தில் கண்டல் தாவரங்களின் பங்கு பற்றி மாணவர்களுக்கு விளங்கமளித்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .