2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் மோடிக்கு கடிதம்

Kogilavani   / 2014 ஜூன் 18 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாண தமிழ் மீனவர்கள், இந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடியினால் பாதிக்கப்படுவது தொடர்பிலும், மேலும் 10 ஆயிரம் வீடுகள் வடபகுதியில் அமைத்துத் தரும்படி கோரியும்  இந்திய பிரதமர் தாமோதரதாஸ் நரேந்திர மோடிக்கு முற்போக்கு தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் சுதர்சிங் விஜயகாந்த் கடிதம் ஒன்றை புதன்கிழமை (18) அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

'இலங்கையின் வடமாகாணத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள அரசியல் கட்சியின் செலயாளர் நாயகம் மற்றும் உறுப்பினர்கள் என்ற ரீதியில் முதற்கண் எமது வாழ்த்துக்களை இந்திய நாட்டின் பிரதமராகிய தங்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.

வரலாற்று ரீதியாக இந்தியாவும் இலங்கையும் நட்பு நாடுகளாக விளங்கி வருகின்றன. சுதந்திரத்திற்கு முன்பும் அதன் பின்னரும் இந்தியாவின் நல்லாட்சி இலங்கை தமிழ் மக்களின் நல்வாழ்விற்கு பல வழிகளிலும் பக்க துணையாக இருந்து வருகின்றது.

இலங்கையின் வட பகுதியில் வாழும் தமிழ் மீனவ மக்களின் வாழ்வாதாரமானது இந்திய மீனவர்களின் சட்ட விரோதமான மீன்பிடிப்பால் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றது. மேலும் 30 வருடங்களிற்கு மேற்பட்ட முரண்பட்ட சூழ்நிலைக்குப் பின்னர் எமது தமிழ் மீனவர்கள் தமது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். அவ்வேளையில் இவ்வாறான இந்திய சகோதரர்களின் அத்துமீறிய சட்ட விரோத மீன்பிடியானது நொந்துபோன எமது தமிழ் மக்களிற்கு மேலும் வலியை ஏற்படுத்துகின்றது.

கடந்த இரண்டு வருட காலப்பகுதிகளில் கிட்டத்தட்ட 132 மீனவப்படகுகளும் 588 இற்கும் மேலான மீனவர்களும் இலங்கை அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டு 15 தடவைக்கு மேலாக விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.

எனவே இவ்வாறான தொடர்ச்சியான சம்பவங்கள் வரலாற்றுச்சிறப்பு மிக்க எமது மீனவர்களிற்கும்  தென் இந்திய மீனவர்களிற்குமான நட்புக்கு பாதகமான ஓர் நிலையினை தோற்றுவித்துள்ளது.

ஆகவே மாண்புமிகு பிரதம மந்திரிக்கு எமது கட்சியினூடாக இலங்கை தமிழ்; மக்களின் தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால், இலங்கை - இந்திய கடலோர எல்லைப் பாதுகாப்பினை பலப்படுத்தி இவ்வாறான சட்ட விரோத மீன்பிடிப்பினை நிறுத்தி எம் வட பகுதி மீனவர்களின் வாழ்க்கையை செழிப்படைய செய்யுங்கள்.

மேலும் கடந்த 2009 ஆண்டு நடந்து முடிந்த யுத்தத்தின் பின்னரான  காலப்பகுதியில் எமது ஸ்திரமற்ற சூழ்நிலையை நிவர்த்தி செய்வதற்கு இந்திய அரசினால் புனர்நிர்மாணம் மற்றும் மீள்குடியேற்றல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அவ்வகையில் வடக்கு மற்றும் கிழக்கில் 50,000 வீடுகள் கட்டித்தருவதாக உறுதியளித்து நடைமுறைப்படுத்தப்பட்டது. அந்த வகையில் மேலும் 10,000 வீடுகளை யுத்தத்தினால் மிகவும் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களான யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிற்கு அமைத்து தருமாறு மாண்புமிகு பிரதமமந்திரியிடம் வேண்டிக்கொள்கின்றோம்.

கடந்த பல ஆண்டுகளாக ஈழத்தமிழருக்கான அரசியல் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டங்கள் பல வடிவங்களில் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

ஆனால் இன்றுவரை தமிழ் மக்களின் சுயநிர்ணயப் பிரச்சனை தீராப்பிரச்சனையாகவே காணப்படுகிறது. எமது கட்சியின் நிலைப்பாடானது 1987ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் 13ஆவது திருத்தச் சட்டத்தில் இலங்கை வாழ் தமிழருக்கும் ஏனைய சிறுபான்மையினருக்கும் திருப்தியின்மை காணப்பட்டாலும் குறைந்த பட்சமேனும் 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் தமிழ் மக்களினதும் ஏனைய சிறுபான்மை மக்களினதும் சுயநிர்ணய உரிமைக்கு வித்திடும் என்பதால் 13ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்துவதற்கு மாண்புமிகு பிரதமமந்திரி இலங்கை அரசிற்கு மிகுந்த அழுத்தத்தை கொடுத்து இச்சட்டத்தை அமுல்படுத்த ஆவண செய்யுமாறு நாங்கள் தங்களை வேண்டி நிற்கின்றோம்' என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், மேற்படி மூன்று கோரிக்கைகளையும் முன்வைத்து முற்போக்குக் கட்சியினரால் யாழ்.கைலாசப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து பேரணியொன்று ஆரம்பமாகி யாழ்.இந்தியத் துணைத்தூதரகத்தினைச் சென்றடைந்து. அங்கு மேற்படி விடயங்கள் தொடர்பான மகஜரும் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .