2025 ஜூலை 03, வியாழக்கிழமை

சர்வதேச விசாரணையை த.தே.கூ வரவேற்கின்றது : சுரேஸ்

Super User   / 2014 ஜூன் 30 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


- எம்.றொசாந்த்


சர்வதேச விசாரணையை முழுமனதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்கின்றது. ஆரம்பம் முதலே இந்த விசாரணை வேண்டும் என்பதை நாங்கள் ஒவ்வொரு சர்வதேச நிகழ்வுகளிலும் வலியுறுத்தி வந்துள்ளோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் இன்று திங்கட்கிழமை (30) தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் நீர்வேலி பிரதேச பணிமனையில் இன்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

யுத்தம் முடிந்த கடந்த 5 வருடத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு பல சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டன. அரசாங்கம், விசாரணையை முழுமையாக நடத்தி அதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைப்பதற்கு ஏதேனும் ஏற்பாடுகள் செய்திருந்தால், சில வேளைகளில் இந்த சர்வதேச விசாரணை என்பது ஒரு வேளை தேவையில்லாத ஒன்றாக இருந்திருக்கும்.

அரசாங்கம், கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க  ஆணைக்குழுவை நியமித்து, அதன் மூலம் சில முடிவுகளை எடுத்த போதும் கூட, இன்று வரை அந்த முடிவுகள் எதனையும் நடைமுறைப்படுத்தவில்லை. இதனை சர்வதேச சமூகமும் ஏற்றுக்கொண்டுள்ளது.

இலங்கை அரசாங்கம், காலம் கடத்தும் செயல்களிலும், சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் செயல்களிலும் சில முடிவுகள் எடுத்தாலும்கூட அது நிச்சயமாக நடைமுறையில் வரவில்லை என்பது முக்கியமாகக் குறிப்பிடப்படவேண்டும்.

ஆகவே சர்வதேச விசாரணை குழு விசாரணையை ஆரம்பிக்க முற்படுகின்றது என்றால், அதற்கு முக்கிய காரணம் இலங்கை அரசாங்கம் தாம் கொடுத்த வாக்குறுதியில் இருந்து மீறியதாகும்.

மேலும், யுத்தத்திற்கு பின்னர் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்கீ மூனுக்கும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

அந்த ஒப்பந்தத்தில் மீள்குடியேற்றத்தினை 1 வருடத்திற்குள் முடிப்பதாகவும், யுத்த மீறல்கள், மனித உரிமை மீறல்கள் போன்ற குற்றச்சாட்டுக்களை தாமே இலங்கைக்குள் விசாரிப்பதாக இலங்கை ஜனாதிபதி கூறியிருந்தார்.

ஆனால் இந்த விடயங்கள் எதுவும் நடைமுறைக்கு வரவில்லை. இன்னமும் மீள்குடியேற்றம் முழுமை பெறவில்லை. வலிகாமம் வடக்கு, வலிகாமம் கிழக்கு, கிளிநொச்சியில் பல பகுதிகள் அதேபோல முல்லைத்தீவு மற்றும் சம்பூர் போன்ற பல இடங்களில் இன்னமும் மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்படவில்லை.

ஆகவே இலங்கை அரசாங்கம் சொன்ன எதுவுமே இதுவரை நடைமுறைப்படுத்த வில்லை என்பது மாத்திரம் அல்ல இனிமேலும் நிறைவேற்றப்படமாட்டாது என்றும் தற்போது சொல்லப்படுகின்றது.

ஆகவே இவ்வாறான சந்தர்ப்பத்தில் சர்வதேச விசாரணை குழு வருவதற்கு இலங்கை அரசாங்கத்தின் தான்தோன்றித்தனமான முடிவுகளும், இலங்கை அரசாங்கம், தமிழ் மக்களுக்கு நீதியை வழங்க மறுத்ததுமே காரணங்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .