2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

தமிழர்களின் பொருளாதார வளங்கள் சுரண்டப்படுகின்றன: அனந்தி

Menaka Mookandi   / 2014 ஜூலை 07 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

வடக்கிலே மேற்கொள்ளப்படும் நில அபகரிப்பினால் திட்டமிட்டு தமிழ் மக்களின் பொருளாதாரமும் சுரண்டப்படுவதாக வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் இன்று திங்கட்கிழமை (07) தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் கீரிமலை, சேந்தான்குளம் மற்றும் திருவடிநிலை ஆகிய பகுதிகளில் 127 ஏக்கர் காணிகளைச் சுவீகரிக்கும் நோக்கில் இன்று திங்கட்கிழமை (07) காலை காணி அளவீடு செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மாகாண சபை, பிரதேச சபை மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் தலையீட்டினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

அதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறுகையில்,

'அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் கொடுக்கப்படும் அழுத்தங்களை மீறியும் வடக்கிலே பெருமளவான தனியாரின் காணிகள் அபகரிக்கப்படுகின்றன. இந்த நில அபகரிப்புக்கள் மூலம் திட்டமிட்டு அவர்களின் பொருளாதாரமும் சுரண்டப்படுகின்றது.

கடற்கரையோரமாக மேற்கொள்ளப்படும் நில அபகரிப்பு காரணமாக மக்களின் கடற்தொழில் பாதிக்கப்படுவதனால் அவர்கள் பொருளாதார ரீதியாக மோசமாக பாதிக்கப்படவுள்ளனர்.

அதேவேளை திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் இந்த நில அபகரிப்புக்கு எதிராக சட்ட ரீதியாக மேற்கொள்ளப்படும் முயற்சிகளை விட அரசியல் ரீதியாக மேற்கொள்ளப்படும் போராட்டங்களும் முயற்சிகளுமே நில அபகரிப்பைத் தடுத்து நிறுத்த முடியும்.

ஏனெனில் வலி.வடக்கில் காணி சுவீகரிப்புக்கு எதிராக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வழக்கு தாக்கல் செய்து அவ்வழக்கு நீதிமன்றில் நிலுவையில் இருக்கும் போதே காணி சுவீகரிப்புக்காக நில அளவீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

எனவே நில அபகரிப்புக்கு எதிராக முன்னெடுக்கப்படும் சட்ட ரீதியான முயற்சிகளை விட அரசியல் ரீதியாக மேற்கொள்ளபப்டும் போராட்டங்கள் முயற்சிகளின் மூலமே அவற்றை தடுத்து நிறுத்த முடியும்' என அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .