2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

தமிழர் சனத்தொகை வீழ்ச்சியால் பாரிய சவால்கள் எழுந்துள்ளன: சி.வி

Menaka Mookandi   / 2014 ஜூலை 17 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா, பொ.சோபிகா

நாட்டில் ஏற்பட்டுள்ள தமிழ் மக்களின் சனத்தொகை வீழ்ச்சியால், தமிழ் மக்கள் அரசியல், பொருளாதார, பண்பாட்டு ரீதியில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்' என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

கல்வி வாய்ப்புகளிலும், வளப்பகிர்வுகளிலும் தமிழ்ர்கள் பின் தள்ளப்பட்டு வருகின்றனர். பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த இடங்களில் இருந்தும் அவர்கள் விரட்டியடிக்கப்படுகின்றனர்' என்றும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.

வடமாகாண கல்வி முறைமை மீளாய்வு அறிக்கை வெளியீடு, யாழ்.வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் இன்று வியாழக்கிழமை (17) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது,

இலங்கையில், முதன்முறையாக 1881ஆம் ஆண்டு சனத்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அவ்வாண்டு மொத்த சனத்தொகையில், 31.8 சதவீதமான மலையகத் தமிழர்கள், முஸ்லிம்கள், இலங்கைத் தமிழர்கள் காணப்பட்டனர். இலங்கைத் தமிழர் மட்டும் எனப் பார்த்தால் அது 24.9 சதவீதமாக காணப்பட்டது.

இலங்கையின் வருடாந்த சராசரி சனத்தொகை அதிகரிப்பு வீதம் ஏறக்குறைய ஒரு சதவீதம் எனக் கூறப்படுகிறது. ஆயினும் எமது இனத்தைப் பொறுத்த வரை அதிகரிப்பிற்குப் பதிலாக வீழ்ச்சியையே புள்ளி விபரத் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.

2011ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பின் படி 24.6 வீதமான அளவிலேயே முழுத் தமிழ்ப் பேசும் மக்களது தொகை காணப்பட்டது. அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த தமிழ் பேசும் மாவட்டங்களின் சனத்தொகை வளர்ச்சி வீதம் மறைப் பெறுமானமாக கணிப்பிடப்பட்டிருப்பதை புள்ளிவிபரத் திணைக்களம் பதிவு செய்துள்ளது.

அதாவது முன்னர் இருந்ததை விடவும் 2011ஆம் ஆண்டு குறைவான அளவிலேயே சனத்தொகை பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. 2011ஆம் ஆண்டு குடிசனத்தொகை மதிப்பீட்டில் ஏறக்குறைய 20 மில்லியனைக் கொண்ட இலங்கைத் தீவின் வடபுலத்தில் 10 இலட்சத்து 60 ஆயிரத்து 23பேர் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

வழமையான ஆண்டிற்குரிய வளர்ச்சி வீதத்துடன் ஒப்பிடும் பொழுது வடபுலத்தில் 1,500,000க்கு மேற்பட்ட தமிழர் இருந்திருக்க வேண்டும். ஆனால் எமது வரலாற்றில் நாம் சந்தித்த பல்வேறு இடப்பெயர்வுகள் காரணமாக பல இலட்சக் கணக்கான மக்கள் எம்மை விட்டுப் பிரிந்து வெளியூர்களுக்கோ அல்லது பிற நாடுகளுக்கோ சென்றுவிட்ட காரணத்தாலும், போரினால் இறந்துவிட்ட காரணத்தினாலும் மிகக் குறைந்த சனத்தொகையைக் கொண்ட ஒரு இடமாக எமது பகுதி விளங்குகின்றது.

இதன் விளைவாக எமது பாடசாலைகளில் 222,805 மாணவர்கள் மாகாணப் பாடசாலைகளிலும், 30306 பேர் தேசியப் பாடசாலைகளிலும் 7426 பேர் பிரத்தியேக பாடசாலைகளிலும்; கல்வி கற்று வருகின்றனர்.

சென்ற வருடம் நாங்கள் வடமாகாணசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உடனேயே ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதியன்று கௌரவ கல்வி அமைச்சரின் தலைமையில் வடபுலக் கல்வி மீளாய்வு தொடங்கப்பட்டது.

முதலில் ஆறு குழுக்கள் நியமிக்கப்பட்டு, பல விடயங்கள் பற்றி சந்தித்து, சிந்தித்துக் கலந்துரையாட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. கல்வித்துறையில் எழுந்துள்ள பிரச்சினைகள், மாணவ சமுதாயத்தின் தேவைகள் போன்ற பலவற்றையும் ஆராய்ந்தறிந்து அவற்றை இவ்வருடம் ஏப்ரல் 23, 24ஆம் திகதிகளில் நடைபெற்ற கல்வி மாநாட்டில் சமர்ப்பித்திருந்தனர்.

இம்மாநாட்டின் போது பல்வேறு தரப்புகளில் இருந்தும் கிடைக்கப்பெற்ற கருத்துக்கள், திருத்தங்கள் போன்றவற்றை உள்வாங்கி வடபுல கல்விப்போக்கை உயிரோட்டத்தோடு இயக்குவதற்கென பதினொரு விடயத் தலைப்புக்களின் கீழ் பதினொரு குழுக்கள் மீள் அமைப்பு செய்யப்பட்டு அவை தமக்குள் இயங்கி, நாம் இன்று எதிர்கொண்டு வரும் கல்விசார் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் பரிந்துரைகளை ஒழுங்கமைத்து நூலுருவாக இன்று எமக்குச் சமர்ப்பித்துள்ளனர்.

அடையாளம் தெரியாமல் எமது வரலாறுகள் அழிக்கப்படுகின்றன

பாரம்பரியம் மிக்க நடேஸ்வராக் கல்லூரி இடிக்கப்பட்டு விட்டது. மயிலிட்டிப் பகுதியில் உள்ள பல ஆலயங்கள் தரைமட்டமாக்கப்பட்டுவிட்டன. ஒல்லாந்தர், போர்த்துக்கீசர் காலத்திற்கு ஒப்பான செயல்கள் இங்கு இப்போது இடம்பெற்று வருகின்றன.

அதிலும் கூட ஒரு பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. போர்த்துக்கீசர்களோ, ஒல்லாந்தர்களோ எமது வணக்கத்திற்குரிய இடங்களை இடித்துத் தரை மட்டமாக்கிய போதிலும், ஏதோ ஒரு அடையாளத்தை அந்த இடத்தில் விட்டு வைத்தனர் என்பதனை அறிய முடிகிறது. உதாரணமாக சாவகச்சேரியில் அவர்களால் இடிக்கப்பட்ட வாரிவனேச்சுவரர் சிவன் ஆலயத்தின் தீர்த்தக் கிணறு சேதமாக்கப்படாது அதே இடத்தில் விட்டு வைக்கப்பட்டது.

ஆனால் இன்று வலிகாமத்தில் அழிக்கப்படும் ஆலயங்கள் இருந்த இடமே அடையாளம் கண்டறிய முடியாதபடி திட்டமிட்ட வகையில் அழிப்புச் செயல்கள் இடம்பெற்று வருகின்றன என்பதை நாம் அவதானிக்கலாம்.

வலிகாமத்தின் வடபகுதி மக்கள் கால்நூற்றாண்டுக் காலம்; கடந்தும் தமது சொந்த நிலங்களை எட்டிப் பார்க்க முடியாத நிலையில் நாம் வடக்கின் மாகாண ஆட்சிப் பீடம் ஏறியுள்ளோம்.

கல்வியில் சிறந்தவர்கள் நாங்கள்

இவ்வாறான பின்புலத்தின் மத்தியில் தான், எமது மாகாண சபையின் கல்வி அமைச்சு, வடபுல கல்வி நிலைமைகள் தொடர்பாக தமது கவனத்தை செலுத்த ஆரம்பித்துள்ளது. இலங்கைத்தீவின் கல்வியில் முன்னோடியாகத் திகழ்ந்த நாம், வீட்டுத் திண்ணைகளையே பள்ளிக்கூடங்களாக்கி குருசிய பாரம்பரியத்தில் பண்படுத்தப்பட்டு வளர்ந்து வந்த எமது சமூகம் இன்று கல்வியில் பின்னடைவையும் பாரிய சவால்களையும் எதிர்கொள்வது பற்றிய தனது தேடலைத் தொடங்கியுள்ளது.

வடபுலக் கல்வி பின்னடைவு என்பது வடபுல மக்களது மொத்த வாழ்க்கைப் பின்னடைவின், ஒட்டு மொத்த அழிவின் ஒரு பகுதியாக இருந்தாலும், ஏதோ ஒரு விதத்திலாவது கல்வியைத் தனித்துப் பார்த்து கல்வி முறைமைகளை மீளாய்வு செய்ய வேண்டிய தேவையினை வடமாகாண கல்வி அமைச்சு அடையாளம் கண்டு கொண்டுள்ளது.

இலங்கையின் கல்விப் பாரம்பரியத்தில் யாழ்ப்பாண மாவட்டம் மிக நீண்ட வரலாற்றைத் தன்னுள் அடக்கியுள்ளது. இலங்கைத்தீவில் முதன் முதலாக 1814ஆம் ஆண்டில் காலியில் உள்ள றிச்மன்ட் கல்லூரியே முதலாவது பாடசாலையாக ஸ்தாபிக்கப்பட்டதாக வரலாறுகள் கூறுகின்றன. தொடர்ந்து 1816களில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியும், 1816 டிசம்பர் 07இல் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியும் உருவாக்கப்பட்டதாகவும் வரலாறுகள் பதிவு செய்துள்ளன.

இவற்றை வைத்து நோக்கும் போது பாடசாலைகளுக்கூடாக கல்வி வழங்கும் முறைமை எமது வடபுலத்தில் 200 வருடங்கள் வரையிலான வரலாற்றைக் கொண்டிருக்கின்றன. இதற்கு முன்னரே எமது திண்ணைப் பள்ளிக்கூடங்கள் இயங்கி வந்தமையை இங்கு பெருமையுடன் கூறிக்கொள்ள வேண்டியுள்ளது. எம்மக்கள் தாங்களாகவே பாடசாலைகளை உருவாக்கி செம்மையாக இயக்கி வந்துள்ளனர்.

கல்வி மேம்பாட்டுக்காகத் தமது சொத்துக்களையே வாரி வழங்கிய நல்ல உள்ளங்களால் ஆராதிக்கப்பட்ட, வாழ்த்தப்பட்ட, பூசிக்கப்பட்ட மண் எமது மண். பெற்றோருக்கும் தெய்வத்திற்கும் இடையே கல்வி வழங்கும் குருவை வைத்து மதித்து வாழ்ந்த எமது மக்களது கல்வி இன்று மீளாய்வு செய்யப்பட வேண்டிய ஒரு இடத்தில் வந்து நிற்கின்றது.

கடந்த காலங்களில் பாடசாலைகளது நோக்கும், போக்கும் இன்றைய காலத்திற்கு முரண்பட்ட விதத்தில் இருந்தன. அன்று ஆசிரியர்கள் குருவாக, தலைவராக மதிக்கப்பட்டு போற்றப்பட்டு வந்த காலம். அன்றைய ஆசிரியர்களை நேருக்கு நேராக முகம் பார்த்து கதைப்பதற்கு மாணவர்கள் தயங்கி நின்ற காலம்.

மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்குமிடையே 'குருபக்தி' உணர்வு வெளிப்படுத்தப்பட்ட காலம். ஆனால் இன்று எமது மழலை மொழி பேசும் எங்களது குழந்தைகள், பிஞ்சுகள்கூட தமது ஆசிரியர்களைப் பெயர்சூட்டியும், சில பொழுதுகளில் தமக்குள் பரிமாறிக்கொள்ளும் செல்லப் பெயர்களால் குறித்தும் அழைக்கின்றனர்.

முன்பு எமது ஆசிரியர்கள் தரும் வீட்டு வேலைப் பயிற்சிகளை செய்து முடிக்க விளக்கம் கேட்டு நாங்கள் தெரிந்தவர்கள், உறவினர்கள் என பலரது வீட்டுப்படிகளிலும் ஏறி இறங்கியிருக்கின்றோம். தரவுகளைத் தேடி பல நூல்களது பக்கங்களைப் புரட்டிப் பார்த்துள்ளோம். ஆனால் இன்று மாணவர்கள் வலைப்பின்னலூடாக நொடிப்பொழுதுகளில்த் தமக்கு தேவையான தரவுகளை, பலவேளைகளில் பிரயோசனப்படாத தரவுகளைக்கூட, தேடிப்பெறும் காலமாற்றம் ஏற்பட்டுள்ளது.

15,300க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் இன்று வடபுலத்தில் பணியாற்றிவருகின்றனர். இவ்வாசிரியர் தொகை வலுவானதாக இருந்தும் மாகாணப் பாடசாலைகளில் 17 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற அடிப்படையில் இருந்தும், தேசியப்பரீட்சைப் பெறுபேறுகள், தேசிய மட்டங்களில் ஒப்பிடும் பொழுது மிகமிகக் குறைவான அளவிலேயே காணப்படுகின்றன. சிலப்பாடத்துறைகளில், 6 பாடங்களில் இன்னும் காத்திரமான வகையில் நாம் தொழிற்பட வேண்டிய தேவை உணரப்பட்டுள்ளது.

கல்வி முறையினாலே குற்றச் செயல்கள் அதிகரிக்கின்றன

தற்போது மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற கல்வியானது அவர்களை பரீட்சைகளுக்கேற்பத் தயார்படுத்துவதையே நோக்காகக் கொள்கின்றதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இக்கல்வி முறைமையானது மாணவர்களுக்கு அவர்களின் எதிர்கால வாழ்க்கையை வளமாகவும், ஒழுக்கமானதாகவும், முன்மாதிரியானதாகவும் மாற்றுவதற்கு உதவாத வகையில் அமைந்துள்ளது.

பரீட்சைகள் முடிந்ததும் புத்தகங்களைக் கட்டி வைப்பது போல அவர்களுடைய வாழ்க்கையும் கட்டி வைக்கப்பட்ட புத்தகங்கள் போலவே மாற்றமடைந்து வருகின்றன. இதனால்த்தான் இன்று தினசரிப் பத்திரிகைகளில் கொலை, கொள்ளை, வாள்வெட்டு மற்றும் களவுகள் போன்ற கொடூரச் செயல்களுக்கு எமது சமுதாயம் முகங்கொடுக்க வேண்டியுள்ளது.

போதைப்பொருள் பாவனை அண்மைக் காலங்களில் வடசமுதாயத்தில் நிலைபெற்று வருகின்றது. இந்நிலையை மாற்றியமைப்பதற்கு பாடசாலைகள் தமது பணிகளை செவ்வனே ஆற்ற வேண்டிய கடப்பாடுடையவைகளாக இருக்கின்றன. பெற்றோர்களும் இவ்விடயங்களில் மிக அவதானமாக செயற்பட வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

அதாவது தமது பிள்ளைகள் எங்கே செல்கின்றார்கள், என்ன செய்கின்றார்கள், நேர காலத்துடன் வீடு திரும்பாவிடின் அதற்கான விளக்கம், அவர்களின் நடத்தை போன்ற இன்னோரன்ன விடயங்களில் மிகவும் கண்ணுங் கருத்துமாக செயற்படல் அவசியமானதொன்றாகியுள்ளன' என அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .