2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

காணி அளவீட்டுக்கு எதிராக போராட்டம்

Menaka Mookandi   / 2014 ஜூலை 20 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன், நா.நவரத்தினராசா

அச்சுவேலி பகுதியில் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் மற்றும் தனியாருக்குச் சொந்தமான 8 ஏக்கர் காணிகளை இராணுவ முகாம் அமைக்க சுவீகரிக்கும் நோக்கில் நிலஅளவைத் திணைக்களத்தினரால் நாளை திங்கட்கிழமை (21) நிலஅளவை மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த நிலஅளவை நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் அப்பகுதியில் நாளை போராட்டமொன்றை நடத்தவுள்ளனர்.

இந்தப் போராட்டம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

'அச்சுவேலி பகுதியிலுள்ள கூட்டுறவுத் துறைக்குச் சொந்தமான காணியையும் தனியாருக்குச் சொந்தமான காணியினையும் அடாத்தான முறையில் சட்டவிரோதமாக காணிகள் சுவீகரிக்கப்படுவதை தொடர்ந்து எதிர்க்கவேண்டிய தேவையும் அவசியமும் காணப்படுகின்றன.

அதனால், பொதுமக்கள் காட்டும் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு நாம் முழுமையான ஆதரவளிப்போம்.

மேற்படி காணிகளை அளவீடு செய்ய கடந்த ஜுன் 2ஆம் திகதி நிலஅளவையாளர்கள் முயற்சித்த போது, அந்நிலங்களுக்குச் சொந்தமான மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் அன்று காணிகள் அளவீடு செய்யப்படவில்லை.

இப்பொழுது எமக்குக் கிடைக்கும் தகவல்களின்படி நாளை திங்கட்கிழமை (21) மீண்டும் பொலிஸாரின் பாதுகாப்புடன் அதே நிலங்களை அளந்து அபகரிக்க முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

அந்த காணிகளின் சொந்தக்காரர்கள் இத்தகைய ஆக்கிரமிப்பை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அநீதியாக அடாத்தானமாக அரசு, அந்த நிலங்களை அளப்பதற்கு முற்பட்டால் ஐனநாயக முறையில் எதிர்ப்பை வெளிப்படுத்துவோம்' என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .