2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

காணி அளவீடு கைவிடப்பட்டது

Menaka Mookandi   / 2014 ஜூலை 21 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.றொசாந்த், எஸ்.ஜெகநாதன்

யாழ்ப்பாணம், அச்சுவேலி, இராச வீதியிலுள்ள 53 பரப்புக் காணியினை இராணுவ முகாம் அமைக்கும் நோக்கில் சுவீகரிப்பதற்காக நிலஅளவை திணைக்கள அதிகாரிகளினால் இன்று திங்கட்கிழமை (21) நிலஅளவை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சி பொதுமக்களின் போராட்டத்தினால் கைவிடப்பட்டது.

9 குடும்பங்களில் 53 பரப்புத் தோட்டக் காணிகளை ஜுன் 2ஆம் திகதி நிலஅளவீடு செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சி பொதுமக்களின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, இன்று திங்கட்கிழமை (21) மேற்படி காணிகளை அளவீடு செய்வதற்கென நிலஅளவைத் திணைக்களத்தினர் வருகை தந்தபோது, அவர்களைக் காணிகளை அளக்கவிடாமல் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்களை சமரசம் செய்யும் நடவடிக்கையில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தன.

இதனையடுத்து, அவ்விடத்திற்கு வந்த காங்கேசன்துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எ.பி.என்.ஜெயவர்த்தன, பொதுமக்கள் காணிகளை அளவீடு செய்வதற்கு இடையூறு செய்கின்றார்கள் என அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினைப் பதிவு செய்யுங்கள் என நிலஅளவையாளர்களுக்கு கூறினார்.

இதனையடுத்து, காணி அளவீட்டு நடவடிக்கைகளைக் கைவிட்டு நிலஅளவையாளர்கள் திரும்பிச் சென்றனர்.

பொதுமக்களுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன், வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர் எஸ்.சஜீவன், வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர் கந்தசாமி சதீஸ் உள்ளிட்டோரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .