2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

ஒருவர் வெட்டிக்கொலை : சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

George   / 2014 ஜூலை 22 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -கி.பகவான்
 
யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் வைத்து இளைஞர் ஒருவர் கடந்த 5 ஆம் திகதி இரவு வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஆறு பேரையும் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்நசேகரம் இன்று செவ்வாய்க்கிழமை (22) உத்தரவிட்டார்.
 
மேற்படி வழக்கு இன்று (22) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, கைது செய்யப்பட்ட அறுவரில் சிலர் இம்முறை க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளமையினால் அவர்களுக்கு பிணை வழங்கும் படி அறுவர் சார்பாகவும் மன்றில் ஆஜராகிய சட்டத்தரணி மன்றில் தெரிவித்தார்.
 
எனினும் பிணை கொடுக்க மறுத்த நீதவான், அவ்வாறு பரீட்சைக்குத் தோற்றுபவர்கள் இருந்தால், அவர்களுடைய பரீட்சை அனுமதி அட்டையின் பிரதியினை மன்றில் சமர்ப்பித்து, பரீட்சை நடைபெறும் தினங்களில் விஷேட பாதுகாப்புடன் தனி அறையில் வைத்து பரீட்சை எழுதுவதற்கான ஒழுங்குகளை சிறைச்சாலை அதிகாரிகள் ஒழுங்கு செய்வார்கள் எனத் தெரிவித்தார்.
 
குறித்த வாள்வெட்டுச் சம்பவத்தில் அல்லாரையைச் சேர்ந்த என்.அன்பழகன் (வயது 26) என்பவர் உயிரிழந்ததுடன், மேலும் 8 பேர் படுகாயமடைந்து சாவகச்சேரி ஆதார, யாழ்.போதனா வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
 
மீசாலையில் ஆலயத்திருவிழாவொன்றில் கடந்த சனிக்கிழமை (05) மாலை இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற கைகலப்பினை அடுத்து இந்த வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றிருந்ததாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
 
இந்நிலையில், மேற்படி வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மீசாலையினைச் சேர்ந்த அறுவர் சாவகச்சேரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, சாவகச்சேரி நீதிமன்றத்தினால் இன்று (22) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
 
இந்த கொலைச் சம்பவத்திற்கும் வடமாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தனுக்கும் தொடர்பிருப்பதாகக் கூறி, உயிரிழந்த அன்பழகனின், பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இணைந்து, சயந்தனின் உருவப் பொம்மையினை கடந்த செவ்வாய்க்கிழமை (15) மாலை புத்தூர் வீதிச் சந்தியில் வைத்து எரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .