2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

பாரிய திட்டங்களின் மேல் மத்திய அரசாங்கம் கண் வைப்பு: சி.வி

Gavitha   / 2014 ஜூலை 31 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-பொ.சோபிகா 


இரணைமடுத் திட்டத்தின் மூலம் மத்திய அரசாங்கம் பாரிய திட்டங்களின் மேலேயே கண் வைத்துள்ளது என்பதை நாங்கள் கண்கூடாகக் காணலாம். அவை அரசாங்கத்தின் சிலருக்கு அல்லது அரசாங்கத்தோடு சம்பந்தப்பட்ட பலருக்கு நல்ல பொருளாதார விருத்தியை ஏற்படுத்தும் என்பது எமக்குத் தெரியாததல்ல என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வடமாகாணக் கைத்தொழில் திணைக்களத்தின் கைத்தொழில் கண்காட்சியொன்று யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் வியாழக்கிழமை (31) ஆரம்பமாகியது.

இந்தக் கண்காட்சியினை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

வட மாகாணத்தின் தேவைகளை மனதிற்கொண்டு இரணைமடுத் திட்டம் தீட்டப்பட்டதா அல்லது தான்தோன்றித்தனமாக அரச தேவைக்கேற்ப திட்டம் வகுக்கப்பட்டதா என்பது தெரியவில்லை.

இருந்தும், மக்களின் மனோநிலை அறியப்படாமலேயே வடமாகாண சபை வர முன்னரே இந்தத் திட்டம் வகுக்கப்பட்டது.

இப்பொழுது 'விடாதீர்கள், விடாதீர்கள்! வெளியுலகப் பணம் வீணாகி விடும்' என்கின்றார்கள். அதனால் தான் நாம் எமது உள்நாட்டுத் தேவைகளை உள்வாங்கி அரசின் திட்டங்களை அமுல்படுத்துங்கள் என்று கூறியுள்ளளோம்.

எமது குடாநாடு நீர்வளத்தை ஏரிகளிலும் குளங்களிலும் கிணறுகளிலும் இருந்துதான் பெற்று வந்துள்ளது. ஆகவே அவற்றின் தீர்வை நீக்கி சிறந்தமுறையில் மாற்றுங்கள். அரசின் பாரிய திட்டத்தை எமது அடிப்படை நீர் வளத்துடன் ஒத்திசைத்துக் கொண்டு போங்கள் என்று கூறியிருக்கின்றோம்.

சில வருடங்களுக்கு முன் திரு. சௌம்யமூர்த்தி தொண்டமானின் அமைச்சின் செயலாளராகக் கடமையாற்றிய கலாநிதி இராமநாதன் அவர்கள் எனக்கு சில நூல்களைத் தந்து விட்டு வெளிநாட்டுக்குச் சென்றார்.

பல வருடங்களுக்கு முன்னர் எமது மத்திய அரசாங்கம் வெளியிட்ட அந்த நூல்களில் சுமார் 800க்கும் மேற்பட்ட கைத்தொழில்களை எவ்வாறு செய்வது, அவற்றிற்கான மூலப் பொருட்கள் எவை என்றெல்லாம் போதிய விபரங்கள் தந்து, வளங்கள் குறைந்த இடங்களில் மக்கள் ஈடுபடக்கூடிய கைத்தொழில்கள் பற்றி விளக்கப்பட்டிருந்தது.

1980களில் தயாரிக்கப்பட்ட அந்நூல்களின் பிரதிகள் எங்கள் அலுவலகங்களில் கிடைக்கின்றதோ நான் அறியேன். ஆனால் நான் அரசியலுக்கு வரமுன்னரே வடகிழக்கு மாகாண மக்களுக்குக் கைத்தொழில்களின் பரீட்சயத்தை ஏற்படுத்த வேண்டும், மக்கள் சுயமாக பொருளாதார ரீதியாக இயங்க வேண்டும் என்ற எண்ணங்களில் திளைத்தவனாக இருந்தேன்.

இது பற்றி கலாநிதி இராமநாதனுடன் பேசியதால் தான் அவர் தமது நூல்களை என்னிடம் தந்துவிட்டுப் போனார். அரசியலுக்கு வந்த நாள் முதல் அவற்றைப் பற்றிய  சிந்தனையே இல்லாதிருந்தேன். இப்பொழுது அவற்றை யாழ்ப்பாணம் கொண்டு வந்து சேர்க்கவில்லையே என்று மனம் வருந்துகின்றேன்.

உண்மையில் எங்கள் மக்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப் போதுமான பல கைத்தொழில்கள் அந்த நூல்களில் காணப்படுகின்றன. விரைவில் அவை பற்றி எமது அலுவலர்களுடன் பேசி புதுப் புது கைத்தொழில்களை எமது மக்களிடையே அறிமுகம் செய்ய இருக்கின்றேன். அவற்றின் படித்திறன் பற்றி ஆராய்வதும்  அவற்றைச் சந்தைப்படுத்தக் கூடிய வசதிகள் உள்ளனவா என்று ஆராய்தலும் அலுவலர்களான உங்கள் பொறுப்பாகும்.

கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் கைத் தொழில்களை மேம்படுத்துவது பற்றி நாங்கள் சிந்திக்க வேண்டும். ஏனென்றால் எமது வடமாகாணம், அதுவும் யாழ.; குடாநாடு, பாரிய கைத் தொழிற் பேட்டைகளை உருவாக்கக் கூடிய சூழலைக் கொண்டதல்ல.

பெரிய பெரிய ஆலைகளை உருவாக்கக் கூடிய விதத்தில் எமது இயற்கைச் சுற்றுச் சூழல் அமைந்திருப்பதாகக் கூற முடியாது.

அத்துடன் எமது நீர் பற்றாக்குறை, நிலத்தின் தன்மை, எமது பாரம்பரிய பண்புகள் யாவும் பாரிய தொழிற்சாலைகளை உருவாக்க உதவுவதாக அமையவில்லை. எனவே தான் கூட்டுறவு அடிப்படையில் சிறிய சிறிய அலகுகளைக் கொண்டு பெரிய அளவில் நன்மை பெறலாம் என்று கருதுகின்றேன்.

வட கிழக்கு மாகாணங்களை இந்நாட்டின் மற்றைய மாகாணங்களைப் போல் கருதாமல்; அவற்றின் விசேட தேவைகளை மனதில் எடுத்து அதற்கேற்ற வகையில் போல் திட்டங்களை வகுக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றேன்.

அண்மையில் அரசாங்கம் வடக்கிற்கு எந்தவித தனிப்பட்ட சிறப்பையோ தனித் தன்மையையோ வழங்க முடியாது என்று கூறியிருந்தது. முழு நாட்டின் திட்டமிடலுக்கு அமைவாக வடமாகாணமும் நடந்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டது.

இதை அறிவற்ற ஆணவத்தின் ஆர்ப்பரிப்பாக வெளிவந்த கருத்தென்றே எண்ணுகின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

இக்கண்காட்சியில் கைத்தறிவு நெசவு உற்பத்திப் பொருட்கள், மட்பாண்ட உற்பத்திப் பொருட்கள், சிற்பி மற்றும் சிரட்டையிலான கைப்பணிப் பொருட்கள், பனை மற்றும் தெங்கு உற்பத்தி பொருட்கள் என்பன காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் வடமாகாண முதலமைச்சருடன், வடமாகாணப் பிரதம செயலர் விஜயலட்சுமி ரமேஸ், மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .