2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

த.தே.கூவை நம்பி பயன் இல்லை: வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் சங்கம் ஆதங்கம்

Thipaan   / 2014 ஓகஸ்ட் 02 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசிய கொள்கைகள் மக்களுக்கு ஒருபோதும் உதவப் போவதில்லையென வடமாகாண கடற்றொழிலாளர் இணையத் தலைவர் சூரியகுமாரன் இன்று (02) தெரிவித்துள்ளார். 

பொலிகண்டி மேற்கு ஊறணியில் அமைந்துள்ள கடற்றொழிலாளர் சங்க மண்டபத்தில் வடமராட்சி வடக்கின் 14 கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகளுடான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

காலம் காலமாக கடற்றொழிலாளர்கள் பல்வேறுபட்ட துன்ப துயரங்களுக்கு முகங் கொடுத்து வரும் நிலையில் எமக்கு தோள் கொடுப்பவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மட்;டுமே.

அதுமட்டுமன்றி கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது, எமது பகுதிகளை அபிவிருத்தி செய்வதிலும் அவரது அயராத உழைப்பு தொடர்கின்றது.

இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வாக்குகளைப் பெற்று தேர்தலில் வெற்றி பெற்ற போதிலும் கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் அக்கறையற்று இருப்பது எமக்கு வேதனையை தருகின்றது.

அவர்களது தேசியவாதத்தினால் எமது மக்களுக்கு ஒருபோதும் உதவமுடியாது என்பது திண்ணமாகியுள்ளது.

ஆனால், எமது இருப்பை தக்கவைத்துக் கொண்டு எமது பகுதிகளை அபிவிருத்தியால் கட்டியெழுப்பி மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தேசிய கொள்கையாக இருக்கின்றது என்றும் இதன்மூலமே மக்கள் அதிக நன்மைகளை பெற்று வருகின்றார்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.

அதுமட்டுமன்றி எமது உரிமைக்காக ஆரம்ப காலங்களில் ஆயுதமேந்தியும் பின்னர் ஜனநாயக வழிமுறையில் தொடர்ச்சியாக குரல் கொடுத்து உழைத்துக் கொண்டிருக்கும் மிகச்சிறந்த தலைமைத்துவத்தைக் கொண்டவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மட்டுமே.

அதுமட்டுமன்றி எமது மக்களின் வாழ்வுக்காகவும் எழுச்சிக்காகவும் அல்லும் பகலும் அயராது உழைத்துக் கொண்டிருக்கின்றார்.

அத்துடன் யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்கள் மட்டுமன்றி முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள் இடர்பாடுகள் தொடர்பிலும் அமைச்சர் ஆராய்ந்து தீர்வு காண வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.  

இதன்போது பொலிகண்டி மேற்கு கடற்றொழிலாளர் சங்க உறுப்பினர் நவனீஸ்வரன், உரையாற்றும் போது நாம் துன்பப்படும் போதெல்லாம் எமக்கு கைகொடுத்து எமது இன்னல்களை துடைப்பவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா என்றும் அவரே தமிழ் மக்களின் சிறந்த தலைவர் என்றும் தெரிவித்தார்.

அதுமட்டுமன்றி மக்களின் நாளாந்த பிரச்சினைகளை தீர்த்து வைப்பது மட்டுமன்றி எமது பகுதியின் அபிவிருத்தி அரசுடன் இணைந்து தொடர்ச்சியாக திட்டங்களை வகுத்து அவற்றை சிறந்த முறையில் அமைச்சர் செயற்படுத்தி வருகின்றார்.

பிள்ளைக்கு துன்பம் வருகின்ற போது அது தன் தாய்க்கு சொல்வது போன்றே எமக்கு பிரச்சினைகள் இடர்பாடுகள் நேர்கின்ற போது நாம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நாடி அவர் மூலமாக ஆறுதலை மட்டுமன்றி எமக்காக உதவிகளையும் பெற்று வருகின்றோம்.

அந்தவகையில் ஒரு பிள்ளைக்கு தாய் எவ்வாறு தனது கடமைகளை உண்ந்து செய்கிறாளோ அதேபோன்றுதான் எமது பிரச்சினைகளுக்கும் தாயின் ஸ்தானத்தில் இருந்து அமைச்சர் தீர்வு கண்டு வருகின்றார் என்றும் தெரிவித்தார்.

இதில் ஈ.பி.டி.பியின் வடமராட்சி இணைப்பாளர் சிறிரங்கேஸ்வரன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் உரைநிகழ்த்தினர்.

இதன்போது பருத்தித்துறை பிரதேச செயலர் ஜெயசீலன், அமைச்சரின் ஆலோசகர் சுந்தரம் டிவகலால, ஈ.பி.டி.பியின் வடமராட்சி கரையோர இணைப்பாளர் ரட்ணகுமார், வல்வெட்டித்துறை பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர் கைலாஜினி ஆகியோர் கலந்து கொண்டனர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .