2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

'மாணவன் மீதான தாக்குதல் சிறுபான்மையினர் மீதான அடக்குமறைகளை வெளிப்படுத்துகிறது'

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 05 , மு.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

'தமிழ் மாணவன் மீதான கொடூரத்தாக்குதல் சம்பவமானது சிறுபான்மையின மக்கள் மீது இலங்கையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் அடக்கு முறைகளை வெளிப்படையாக காட்டி நிற்கின்றது' என வடமாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் திங்கட்கிழமை (04) தெரிவித்தார்.

சப்ரகமுவா பல்கலைக்கழகத்தில் முகமாலையைச் சேர்ந்த மாணவன் ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பில் சுகிர்தனினால் திங்கட்கிழமை (04) வெளியிடப்பட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

'சப்ரகமுவா பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் கிளிநொச்சி, முகமாலையைச் சேர்ந்த சந்திரகுமார் சுதர்சன் என்ற மாணவன்  கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்.

மாணவர்கள் விடுதிக்குள் புகுந்த முகமூடி அணிந்த சிலர், இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

முகமூடி அணிந்த ஒரு நபர் தனது வாயைப் பொத்திப் பிடித்திருக்க, மற்றுமொருவர் தன்னைத் தடியொன்றினால் பலமாகத் தலையில் தாக்கியதாகவும் இதனால் தான் மயங்கி விழுந்துவிட்டதாகவும் தாக்குதலுக்குள்ளான மாணவன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மாணவன் மீதான தக்குதல் சம்பவமும் ஏனைய மாணவ, மாணவிகளுக்கு விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தல்களும் வன்மையாக கண்டிக்கப்படவேண்டியவை. சிங்கள மாணவர்களினால் விடுக்கப்பட்ட இத்தகைய அச்சுறுத்தல்கள்  தமிழ், முஸ்லிம் மாணவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறான தாக்குதல் சம்பவங்களும் அச்சுறுத்தல்களும் எதிர்காலத்தில் பாரியவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை என்பதை அதிகாரத்திலுள்ளவர்கள் புரிந்துகொள்வதோடு, இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக உரிய விசாரணைகளை மேற்கொண்டு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தண்டிக்கவேண்டும்' என்றும் அந்த கண்டன அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .