2025 ஜூலை 12, சனிக்கிழமை

நெடுந்தீவு குதிரைகள் வெளியில் செல்ல தடை

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 08 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-யோ.வித்தியா


நெடுந்தீவிலுள்ள குதிரைகளை வெளியிடங்களுக்கு எடுத்துச் செல்லப்படுவதை உடனடியாக தடை செய்யவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் திங்கட்கிழமை (08) தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் கூறியதாவது,

'நெடுந்தீவிலுள்ள குதிரைகளில் நான்கு குதிரைகளை, கடற்படையினர் கடந்த வாரம் வெளியிடங்களுக்கு எடுத்து செல்வதை அப்பகுதி மக்கள் அவதானித்துள்ளனர்.

இது தொடர்பாக விசாரித்தத்தில் மேற்படி குதிரைகள் இராணுவத்தினரால் நடத்தப்படும் சுற்றுலா விடுதிகளுக்கு கொண்டு செல்லப்படுவதாக அறிந்தோம்.

இது சட்டத்தை மீறும் செயல். நெடுந்தீவிலிருந்து எந்த குதிரைகளையும் வெளியிடங்களுக்கு எடுத்துச் செல்வதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

இது தொடர்பில் நெடுந்தீவு பிரதேச செயலாளருக்கும் அறிவுறுத்தியுள்ளோம். அத்துடன், எதிர்வரும் வாரமளவில் அங்கு நேரடியாகச் சென்று நிலைமைகளை ஆராய்வோம்.

இதேவேளை, மேற்படி குதிரைகளுக்கு சரணாலயம் அமைக்க 500 ஏக்கர் நிலத்தை வன ஜீவராசிகள் திணைக்களம், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கோரியிருந்தனர். சம்மதம் பெறுவதற்கான கோரிக்கை கடிதம் முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் சம்மதக்கடிதம் கிடைக்கப்பெற்றதும், சரணாலயம் அமைக்கும் நடவடிக்கையை வன ஜீவராசிகள் திணைக்களம் மேற்கொள்ளும்' என அவர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பில் வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் கூறுகையில்,

'600 வருடகால பாரம்பரியம் கொண்ட நெடுந்தீவு குதிரைகளை வெளியில் எடுத்துச் செல்லும் நடவடிக்கை உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

நெடுந்தீவிலுள்ள குதிரைகள் வரலாற்று பழமை வாய்ந்தவை. இவை வரலாற்று அடையாளமாக பேணப்பட்டு வருகின்றன.

வன ஜீவராசிகள் திணைக்களமும், யாழ்ப்பாண பல்கலைக்கழகமும் இணைந்து அண்மையில் நடத்திய கணக்கெடுப்பில், 534 குதிரைகள் நெடுந்தீவில் இருப்பதாக கண்டறியப்பட்டது.

இவற்றை வெளியில் கொண்டு செல்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என மக்கள் என்னிடம் முறையிட்டனர். இதனை வடமாகாண விவசாய அமைச்சரது கவனத்திற்கு கொண்டு வந்தேன்.

ஒல்லாந்தர் காலத்துக்குரிய இந்த குதிரைகள், அக்காலத்தில் போர்களின் போதும் பயன்படுத்தப்பட்டுள்ளன' என அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .