2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

'முதியோர் அடையாள அட்டைக்கு அரச திணைக்களங்களில் மரியாதையில்லை'

Kogilavani   / 2014 ஒக்டோபர் 02 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா


முதியோர் அடையாள அட்டை வைத்திருக்கும் முதியோர்களுக்கு யாழ்.மாவட்டத்திலுள்ள அரச நிறுவனங்களின் உரிய மரியாதைகள் வழங்கப்படுவதில்லை' என முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்தார்.

கைதடி அரச முதியோர் இல்லத்தில் புதன்கிழமை (01) நடைபெற்ற சர்வதேச முதியோர் தின கொண்டாட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

'இது தொடர்பாக உள்ளுராட்சி அமைச்சின் செயலாளருக்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன்.

எமது நாட்டில் சுமார் 15 இலட்சம் முதியவர்கள் காணப்படுகின்றார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் கைதடி அரச முதியோர் இல்லத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஒருவருட காலத்தில் மிகவும் முன்னேற்றகரமான பல நடவடிக்கைகளையும் இந்த முதியோர் இல்லம் மேற்கொண்டுள்ளது.

அரச முதியோர் இல்லங்கள், கடந்த கால யுத்தத்தின் பின்னர் பல்வேறு செயற்பாடுகளையும்;, பல திட்டங்களையும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் செயற்படுத்தி வருகின்றன.

வடமாகாணத்தில் 18 முதியோர் இல்லங்கள் இயங்குகின்றன. அவர்களின் பிரதிநிதிகளும் கூட இந்நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார்கள்.

ஜனாதிபதியால் பல்வேறு நடவடிக்கைகள் முதியவர்களின் நலன்கருதி மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கென பெருந்தொகையான பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை எல்லா திணைக்கள அதிகாரிகளும் ஒன்றிணைந்து ஜனாதிபதியின் செயற்றிட்டங்களை நல்ல முறையில் செயல்படுத்துவார்கள் என எதிர்பார்க்கின்றோம்' என அவர் மேலும் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .