2025 ஜூலை 14, திங்கட்கிழமை

போராட்ட இயக்கங்கள் தீண்டத்தகாதவை அல்ல: சிவாஜிலிங்கம்

A.P.Mathan   / 2014 ஒக்டோபர் 08 , மு.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்
 
தமிழீழ விடுதலைப்புலிகள் உள்ளிட்ட போராட்டக்குழுக்கள் அனைவரும் தீண்டத்தகாதவர்கள் அல்ல என வடமாகாண சபை உறுப்பினர் (டெலோ) எம்.கே.சிவாஜிலிங்கம் கூறினார்.
 
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், 'ஆயுதக்குழுக்களுடன் தன்னால் சேர்ந்திருக்க முடியாத காரணத்தினாலேயே தான் தமிழரசுக்கட்சியுடன் சேர்ந்து இருக்கிறேன்' என அண்மையில் கூறினார்.
 
இந்த கருத்து தொடர்பில் யாழ். ஊடக அமையத்தில் செவ்வாய்க்கிழமை (07) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் விளக்கமளிக்கையிலேயே சிவாஜிலிங்கம் இவ்வாறு கூறினார்.
 
அவர் அங்கு மேலும் கூறுகையில்,
 
எமது தேசிய விடுதலை போராளிகளை கொச்சைப்படுத்துபவர்களை தமிழினத் துரோகிகள் என கூறலாம்.
 
வடமாகாண சபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட வரும்படி விக்னேஸ்வரனை இரா.சம்பந்தன் அழைத்த போது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலுள்ள அனைத்து கட்சிகளும் சேர்ந்து வந்து கேட்டால் மட்டுமே போட்டியிட வருவேன் என விக்னேஸ்வரன் கூறினார்.
 
அப்போது அவருக்கு தெரியவில்லையா நாங்கள் ஆயுதக்குழுக்கள் என்று. அப்போது ஆயுதக் குழுக்களுடன் இணைந்து, பிரபாகரன் மாவீரன் என்று தேர்தல் பிரசாரம் செய்து தேர்தலில் அமோக வெற்றிபெற்ற பின்னர், போராட்ட அமைப்புக்களுடன் இணைந்திருக்க முடியாது என்கிறார்.
 
வடமாகாண சபையில் இருக்கின்ற 30 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களில், 13 உறுப்பினர்கள் போராட்டக் குழுக்களை சேர்ந்தவர்கள். அதாவது, ஈ.பி.ஆர்.எல்.எவ் 6 உறுப்பினர்களும், டெலோவை சேர்ந்த 5 உறுப்பினர்களும், புளொட் அமைப்பை சேர்ந்த 2 உறுப்பினர்களும் ஆவார்கள்.
 
அனைவரும் இணைந்தே சி.வி.விக்னேஸ்வரனை முதலமைச்சராக அங்கிகரித்தனர்.
 
நாங்கள் அனைவரும் 27 வருடங்களுக்கு முன்னர் ஆயுத போராட்டத்தை கைவிட்டு ஜனநாயக நீரோட்டத்தில் கலந்துகொண்டுவிட்டோம்.
 
1969ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டக் குழுக்கள் ஆரம்பிக்கப்பட்ட போது, அப்போதிருந்த அரசியல் தலைவர்கள் அந்த ஆயுதக் குழுக்களுக்கு தங்களுடைய ஆதரவை வழங்கி வந்தனர்.
 
1981இல் டெலோவை சேர்ந்த குட்டிமணி, தங்கத்துரை உள்ளிட்ட போராளிகள் கைது செய்யப்பட்ட போது, அவர்களுக்காக சிவசிதம்பரம் உள்ளிட்ட தலைவர் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட்டிருந்தார்கள்.
 
1985ஆம் அண்டு திம்புவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 5 போராட்டக் குழுக்கள் கலந்துகொண்டிருந்தன.
 
2004ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளினால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. கூட்டமைப்பாகவே பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டனர்.
 
எமது இந்த போராட்ட இயக்கங்களில் இருந்து 30 ஆயிரம் போராளிகள் தங்கள் இன்னுயிரை நீர்த்தமையால் இன்று எமது பிரச்சினை சர்வதேச ரீதியில் பேசப்படுகின்றது.
 
எங்கள் ஆதரவுடன் எங்கள் தோள் மீது ஏறி நின்று, தீண்டத்தகாதவர்கள் என்று கூற முடியாது.
 
அதனை நாங்கள் அனுமதிக்க போவதில்லை. முதலமைச்சர் உட்பட எவரையும் இவ்வாறு கதைப்பதற்கு அனுமதிக்கமாட்டோம் என அவர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .