2025 ஜூலை 14, திங்கட்கிழமை

தமிழர்களின் மீட்பர் போல டக்ளஸ் தன்னை காட்டிக்கொள்கிறார்: சிறிதரன்

George   / 2014 ஒக்டோபர் 16 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன்


யுத்தம் இடம்பெற்ற 2006ஆம் ஆண்டு காலப்பகுதியில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் காணாமற்போகவும் அவர்களில் பலர் கொலை செய்யப்படவும் காரணமாக இருந்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, தற்போது தமிழர்களை மீட்பவர்கள் போல தன்னை காட்டிக்கொள்கின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

வடமாகாண நீரியல் ஆய்வு மையத்திறப்பு விழா தொண்டைமானாறு நீர்ப்பாசன திணக்கள வளாகத்தில் புதன்கிழமை (15) மாலை இடம்பெற்றபோது, அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை கூறினார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

மக்களுடைய எண்ணங்கள் சரியானதாக அமைவதற்காகவே, நாங்கள் சரியான சகவாழ்வுடனும், சமயோசித்துடனும் இணைந்து எங்களுடைய அரசியலை செய்து வருகிறோம். ஆனால், மத்திய அரசிலிருப்பவர்கள், தமிழர்கள் தங்களுக்கென்று தனியான ஆட்சியொன்றை ஏற்படுத்திவிடக்கூடாது என முனைப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.

இதன் ஆதாரத்தை கடந்த வாரம் கூட பார்த்திருப்பீர்கள். கிளிநொச்சி, யாழ்ப்பாண மாவட்டங்களில் சில காட்டுப்பூனைகள் கரகம் ஆடியதை.
ஒரு நாட்டினுடைய ஜனாதிபதி, அந்த நாட்டின் முதல் மனிதன். கௌரவமாக மதிக்கக்கூடியவர். அந்த முதல் மனிதன் நாட்டின் இறைமைமிக்க மக்களை பார்த்து, நீங்கள் ஒரு வைக்கோல் பட்டடை நாய்கள் போல செயற்படுகின்றீர்கள் என சொல்லுகிறார் என்றால் அவருடைய அறிவின் தரத்தை அவ்வார்த்தைகள் வெளிப்படுத்தி நிற்கின்றன.

அவர் எந்த காலத்திலும் ஆக்ரோசமான இனவாத கருத்துக்களை பேசுகிறவர். அவர் தமிழ் மக்களுக்கு எதிரான சிந்தனைகளை கொண்டிருக்கின்றவர். நாங்கள் நிம்மதியாக வாழவேண்டும் என்பதற்கான ஆயிரம் ஆயிரம் வீரர்கள் தங்கள் உயிரை கொடுத்து இந்த மண்ணின் விடுதலைக்காக போராடினார்கள்.

தமிழீழ விடுதலை போராட்டத்தின் மூத்த போராளியாக பேசப்படுகின்ற தங்கத்துரை, 1983ஆம் ஆண்டு, நாங்கள் ஆயுதங்கள் மீது காதல் கொண்ட மனநோயாளிகள் அல்ல என்று இலங்கை நீதிமன்றத்தில் கூறினார்.

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் 1985ஆம் ஆண்டு, இந்திய பத்திரிகையாளர் அனித்தா பிரதாப்பிற்கு பேட்டி அளிக்கும் போது, நாங்கள் ஆயுதங்கள் மீது விருப்பம் கொண்டு அவற்றை எடுத்தவர்கள் அல்ல. ஆயதங்கள் எங்கள் மீது தினிக்கப்பட்டன என தெரிவித்தார்.

ஆகவே, நாங்கள் நாட்டை பிரியுங்கள் என கூறவில்லை. துப்பாக்கிகளை தூக்குங்கள் என்றும் சொல்லவில்லை. எங்கள் உரிமைகள் வேண்டும் என்றே கேட்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .