2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

புதையல் இருப்பதாக மோசடி செய்தவர்களுக்கு பிணை

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 17 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொ.சோபிகா, யோ.வித்தியா

புதையல் தங்க கட்டிகள் எனக்கூறி போலி தங்கக்கட்டிகளை கொடுத்து பணமோசடி செய்த அநுராதபுரத்தை சேர்ந்த நால்வரையும் 82 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணைகளில் செல்ல யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார் வெள்ளிக்கிழமை (17) அனுமதியளித்தார்.

அத்துடன், மேற்படி வழக்கை டிசம்பர் மாதம் 10ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்தார். மேற்படி சந்தேகநபர்கள் வீதி புனரமைப்பின் போது தங்களுக்கு தங்கக்கட்டிகள் கிடைத்ததாகவும், அதனை விற்பதாக பாசாங்கு செய்து யாழ்.மாவட்டத்திலுள்ள மூன்று பேரிடம் 65 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் வரையில் மோசடி செய்துள்ளனர்.

அவர்கள் தங்கக்கட்டிகள் எனக்கொடுத்தவை அனைத்தும் பித்தளை மற்றும் ஈயக்கட்டிகள் என்பது தெரியவரவே பாதிக்கப்பட்ட மூவர் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்தனர். இதனையடுத்த, கடந்த 4ஆம் திகதி நாவற்குழி பகுதியில் வைத்து நான்கு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர்.

தொடர்ந்து யாழ்.நீதவான் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இந்நிலையில், நீதிமன்ற உத்தரவிற்கமைய இன்று வெள்ளிக்கிழமை (17) சந்தேகநபர்கள் அடையாள அணி வகுப்பிற்கு உட்படுத்தப்பட்டனர்.

இதன்போது, பாதிக்கப்பட்ட மூவரும் தனித்தனியாக மேற்படி சந்தேகநபர்களை அடையாளம் காட்டினார்கள். பாதிக்கப்பட்ட கீரிமலையை சேர்ந்த முதலாவது நபர், 4 சந்தேகநபர்களும் இணைந்து தன்னிடம் பண மோசடி செய்ததாக அடையாளம் காட்டினார்.

பாதிக்கப்பட்ட முஸ்லீம் வீதியை சேர்ந்த இரண்டாவது நபர், 3 சந்தேகநபர்கள் தன்னிடம் பண மோசடி செய்ததாக அடையாளம் காட்டினார். பாதிக்கப்பட்ட மூன்றாவது நபரான சென்.பற்றிக்ஸ் வீதியை சேர்ந்த நபர், தன்னிடம் 3 சந்தேகநபர்கள் தன்னிடம் மோசடியில் ஈடுபட்டதாக அடையாளங்காட்டினார்கள்.

மூன்று வழக்குகளும் தனித்தனியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, சந்தேகநபர்கள் தங்களுக்கு பிணை வழங்கும்படி வழக்கறிஞர் ஊடாக மன்றில் கோரியிருந்தனர்.

இதனையடுத்து, முதலாவது குற்றத்தை செய்த 4 சந்தேகநபர்களையும் தலா 5 இலட்சம் பெறுமதியுடைய தலா 2 ஆட்பிணையிலும், இரண்டாவது குற்றத்திற்காக 3 சந்தேகநபர்களை தலா 2 இலட்சம் பெறுமதியான தலா 2 ஆட்பிணையிலும், மூன்றாவது குற்றத்திற்காக 3 சந்தேகநபர்களுக்கு தலா 5 இலட்சம் பெறுமதியான தலா 2 ஆட்பிணையிலும் செல்ல நீதவான் அனுமதியளித்தார்.

அத்துடன், பிணை எடுப்பவர்கள் தாங்கள் வசிக்கும் இருப்பிடத்தை கிராமஅலுவலர் ஊடாகவும், பிரதேச செயலாளர் ஊடாகவும் உறுதிப்படுத்தி மன்றில் சமர்ப்பித்த பின்னர் பிணையெடுக்க முடியும் என நீதவான் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .