2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

வடமாகாண மக்களை புறக்கணித்துவிட்டு ஜனாதிபதியாக முடியாது: சி.வி

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 19 , பி.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

'வடமாகாண மக்களின் வாக்குகளை புறக்கணித்துவிட்டு, ஜனாதிபதி பதவியை மூன்றாம் முறை எட்ட முடியாது. ஆகவே, வடமாகாண மக்களை எப்படியாவது தன் பக்கம் இழுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன்தான் ஜனாதிபதி தாராள சிந்தையுடைய கொடையாளியாக மாறியுள்ளார்' என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறினார்.

முள்ளிக்குளம் பகுதியில் தலா 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியுடைய 82 தற்காலிக வீடுகள் அமைக்கும் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை (19) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது,

'இரண்டு வருடங்களாக எமது மக்களுக்கு வழங்காது இடைநிறுத்தி வைக்கப்பட்ட காணி அனுமதிப்பத்திரங்கள், திடீரென்று மக்களைப் போய்ச் சேர்கின்றன என்றால், அதற்கு காரணம் என்ன?. மக்களின் ஆபரணங்களை 5 வருடங்களின் பின்னர் திடீரென்று வெளிக்கொண்டு வரும் தார்ப்பரியம் என்ன?.

வடமாகாண மக்களின் வாக்குகளை புறக்கணித்துவிட்டு மஹிந்த ராஜபக்ஷவால், ஜனாதிபதி பதவியை மூன்றாம் முறை எட்ட முடியாது. புகையிரத பாதையை நிர்மாணித்து தந்தது இந்திய அரசாங்கம் என்றும், வன்னியில் வைத்தியசாலையை அமைத்து கொடுத்தவர்கள், பசுபிக் பிராந்திய அமெரிக்க கடற்படையினர் என்றும் எமது மக்களுக்கு நன்றாக தெரியும்.

சுயநலங்கருதி சும்மா இருந்த ஜனாதிபதி, சுறுசுறுப்பாக வடக்கு வந்து சுற்றுலா மேற்கொண்டுவிட்டுச் சென்றுள்ளார். நாம் பதவியில் இருப்பது எந்தளவுக்கு அரசாங்கத்தை நிலை குலைய வைத்துள்ளது என்பது இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். நாம் வெறுமனே பதவியில் இருந்தாலே போதும், அரசாங்கம் எமது மக்களுக்கு வாரித்தரும். 

வட, கிழக்கு மாகாணங்களில் படையினர் பெருவாரியாக அரசாங்கத்தால் நிலை நிறுத்தப்பட்டுள்ளாதால் எமது மக்கள் படும் அவலத்தையும் அவதியையும் எடுத்தியம்பும் ஒரு நிகழ்வாக இன்றைய இந்த நிகழ்வு அமைந்துள்ளது.

முள்ளிக்குளம் பகுதியில் இருந்து கடந்த ஏழு வருடங்களுக்கு முன்னர் இடம்பெயர்ந்த எம்மக்கள் தமது சொந்த இடங்களுக்கு திரும்பி சென்று குடியேற முடியாத ஒரு நிலையை இருக்கின்றது.

இவர்களின் பலகால வாழ்விடங்களை விட்டு வெளியேற படையினர் மறுக்கின்றனர். எங்கு சென்றாலும் இப்பொழுது இராணுவ பிரசன்னத்தையும் அவர்கள் முகாம்களையும் தான் பார்க்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் காணப்படுகின்றது.

நேற்று இரணைமடு குளத்தை பார்வையிட சென்றேன். அங்கும் இராணுவம். சென்ற கிழமை ஈச்சிலவக்கை சென்றேன். அங்கும் இராணுவம். எங்கும் இராணுவம். இவர்கள் எம் மண்ணில் நீடித்து நிற்பதால் பல அவலங்களை நாம் எதிர்நோக்கி வருகின்றோம்.

நீர் பற்றாக்குறை, நீரில் அசுத்தம் கலத்தல் போன்றவை கூட படையினரின் பிரசன்னத்தால் ஏற்பட்டுவரும் விளைவுகளே என்று சென்ற சில நாட்களுக்கு முன்னர் கருத்து தெரிவிக்கப்பட்டது.

படையினர் எதற்காக மக்களை வசீகரிக்க செயற்திட்டங்கள் வகுத்து செயலாற்றுகின்றார்கள். அவர்களை வெளியேறுமாறு வடமாகாணசபை கேட்டுள்ளது. தாம் தொடர்ந்து இங்கு இருக்க வேண்டும் என்றால் எமது மக்களின் மனத்தை குளிர வைக்க வேண்டும்.

பலதை கொடுத்தும் பயம் காட்டியும் தேர்தலில் தமது பங்காளர்களை நிறுத்தியும் மக்கள் தங்களுக்கு வாக்களிக்காத படியினால் எப்படியாவது எமது மக்கள் மனதை மாற்ற வேண்டும் என்று மானியங்களை வழங்கி வருகின்றார்கள் படையினர்.

நாங்கள் பதவியில் இருக்கும்வரை அவர்கள் தொடர்ந்து பலதை உங்கள் நன்மைக்காக செய்து வருவார்கள். ஏனென்றால், அவர்களுக்கு எமது வாக்குகள் வேண்டும். ஏன் அவர்கள் பதவியில் இருந்தால் அவற்றை செய்ய மாட்டார்களா என்று கேட்பீர்கள்.

செய்வார்கள் ஆனால் முழுமையாக வடமாகாணத்தை சிங்கள நாடாக மாற்றி செயற்படுவார்கள். நாம் இருப்பதால்த்தான் அவர்கள் சென்ற ஐந்து வருடங்கள் தான்தோன்றித்தனமாய் செய்து வந்தவற்றை சற்றுத்தளர்த்தி தவிர்த்து வருகின்றார்கள்.

நாம் இருப்பதால் இங்கு பலர் செய்த ஊழல்கள் அம்பலத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன. மக்களின் பணத்தை எவ்வாறு கொள்ளை அடித்தார்கள் என்பது வெளிவந்து கொண்டிருக்கின்றது.

நாமிருந்தால் ஊழலின்றி செயற்பட வேண்டிய ஒரு கடப்பாடு எல்லோருக்கும் எழுந்துள்ளது. நாம் 3 விதங்களில் எமக்கு வேண்டியவற்றை பெறலாம்.

ஒன்று வன்முறை. ஆனால் வன்முறை மேலும் வன்முறைக்கே வித்திடும். இரண்டு வலிய சென்று சரணடைந்து எமது வாழ்வை விருத்தி செய்வது. என்றென்றும் இவ்வாறு நலன் பெறுபவர்கள் அடிமைகள் என்றே கணிக்கப்படுவார்கள்.

மூன்றாவது அப்பழுக்கற்ற கொள்கைகளை முன்வைத்து எமது தேவைகளை கூறிப்பெற எத்தனிப்பது. இது காலம் போகும். ஆனால் காலக்கிரமத்தில் நன்மை பயக்கும். நாம் இதைத்தான் செய்து வருகின்றோம். வன்முறையை கண்டித்துள்ளோம்.

வருந்தி அழைத்தாலும் எமது வலுவான கொள்கைகளில் இருந்து வழுவாது எமது நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம். ஆகவே, வடமாகாணம் எந்த விதத்திலும் நன்மை பெறப்போவது நிச்சயமே. எமது வருங்காலம் நல்ல காலமாக அமையும் என முதலமைச்சர் மேலும் கூறினார்.

இந்த தற்காலிக வீடுகளும், நடுத்தர வகையான வீடுகள். சீமெந்தினால் அமைக்கப்பட்ட தளத்தின் மீது இரண்டு வரிகள் கற்கள் அடுக்கி சுவர்கள் அமைத்து, அதன் மேல் கிடுகு மூலம் மறைப்பு செய்யப்பட்டு, கூரைக்கு தகரம் இடப்படவுள்ளது.

இரண்டு அறைகள் விறாந்தை உள்ளடங்கலாக இந்த வீடுகள் அமைக்கப்படுகின்றன. மூன்று வாரத்திற்குள் இந்த வீடுகள் அமைத்து முடிக்கப்படவுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .