2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

நரியிட்டான் வேள்வி மீண்டும் தடுப்பு

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 29 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொ.சோபிகா

மல்லாகம், நரியிட்டான் வைரவர் ஆலயத்தில் வேள்வி நடத்துவதற்கு எடுக்கப்பட்ட இரண்டாவது முயற்சியும் இன்று புதன்கிழமை (29) தெல்லிப்பளை பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தெல்லிப்பளை சுகாதார வைத்தியதிகாரி த.நந்தகுமார் தெரிவித்தார்.

தெல்லிப்பளை பிரதேச சபையின் அனுமதிபெற்று மேற்கொள்ளப்படவிருந்த இந்த வேள்வியே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேற்படி ஆலயத்தில் வருடாவருடம் தீபாவளி தினத்தன்று மிருக பலி மேற்கொள்வது இடம்பெற்று வருகின்றது.

அந்த வகையில், கடந்த 22ஆம் திகதியன்றும் மிருக பலி இடம்பெறவிருந்த தருணத்தில், சைவ மகா சபை, தெல்லிப்பளை சுகாதார வைத்தியதிகாரி பணிமனையினர் ஆகியோர் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாடு காரணமாக தெல்லிப்பளை பொலிஸார் மேற்படி வேள்வியை தடுத்து நிறுத்தினார்கள்.

தெல்லிப்பளை சுகாதார வைத்தியதிகாரி பணிமனை, தெல்லிப்பளை பிரதேச சபை ஆகியவற்றின் அனுமதி பெறாமல் வேள்வி மேற்கொள்ளப்படவிருந்த காரணத்தால் வேள்வி தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் மீண்டும் மேற்படி வேள்வி இன்று புதன்கிழமை (29) தெல்லிப்பளை பிரதேச சபையின் அனுமதி பெறப்பட்டு மேற்கொள்ளப்படவிருந்தது.

எனினும், சைவ மகா சபை தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் மீண்டும் முறைப்பாடு செய்தனர். இதனையடுத்து, அங்கு சென்ற பொலிஸார் வேள்வியை தடுத்து நிறுத்தினார்கள்.

வேள்வியை நடத்துபவர்கள் பிரதேச சபையிடம் அனுமதி பெற்று, வேள்வியில் வெட்டப்படும் ஒவ்வொரு ஆடுகளும் பொதுச்சுகாதார பரிசோதகரால் பரிசோதிக்கப்பட்டு அனுமதியளிக்கப்படவேண்டும்.

அத்துடன், வேள்வி இடம்பெறும் பகுதி சுற்றி அடைக்கப்பட்டு, ஒவ்வொரு ஆடு வெட்டப்பட்டு அது வெளியேற்றப்பட்ட பின்பே மற்றய ஆடு வெட்டப்படும் இடத்திற்கு கொண்டு சென்று வெட்டப்படவேண்டும்.

இவ்வாறான நடைமுறைகள் பின்பற்றி வேள்வி நடத்துவதற்கு மல்லாகம் நீதிமன்றத்தால் அண்மையில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இருந்தும் இன்று நடைபெறவிருந்த வேள்வி சுகாதார வைத்தியதிகாரி பணிமனையின் பொதுச்சுகாதார பரிசோதகரின் அனுமதி பெறாமல் இடம்பெறவிருந்தது.

இதனாலேயே முறைப்பாடு பதிவு செய்து மீண்டும் வேள்வியை தடுத்து நிறுத்தியதாக சுகாதார வைத்தியதிகாரி மேலும் தெரிவித்தார்.

பிரதேச சபையின் அனுமதி பெறப்பட்டிருந்த போதும், சுகாதார வைத்தியதிகாரி பணிமனையின் அனுமதி பெறப்படாமல் வேள்வி நடத்தப்பட்டமையால் தாங்கள் இந்த வேள்வியை தடுத்து நிறுத்தியதாக தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .