2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

வடமாகாண சபைக்கு எதிராக செயற்படவில்லை: அன்டனி ஜெகநாதன்

Menaka Mookandi   / 2014 நவம்பர் 04 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-பொ.சோபிகா

வடமாகாண முதலமைச்சருக்கும் அமைச்சர்களுக்கும் எதிராக செயற்படும் எண்ணம் தனக்கு இல்லை என வடமாகாண சபை பிரதி அவைத் தலைவர் அன்டனி ஜெகநாதன் திங்கட்கிழமை (03) தெரிவித்தார்.

யாழ்.ஊடக அமையத்தில் திங்கட்கிழமை (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'வட மாகாண சபையை குழப்பும் நோக்கம் எமக்கு கிடையாது. அத்துடன், எந்த காலத்திலும் அவ்வாறு செயற்படவும் இல்லை. செயற்பட போவதும் இல்லை' என்றார்.

'வடமாகாண சபையின் பயன்கள் மக்களை சென்றடைய வேண்டும் என்பதே எமது குறிக்கோள். வடமாகாண சபையின் குறைகள் தொடர்பில் நான் சபையில் பேசும் போது, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனோ அல்லது அமைச்சர்களோ ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. நான் சொன்ன கருத்துக்கள் சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டன. வடமாகாண சபையை சிறப்பாக இயங்க வைக்கவே குறைகளை நான் குறைகளைச் சுட்டிக்காட்டினேன்.

பேசுவதற்கான உரிமை அனைத்து மக்களுக்கும் இருக்கின்றது. வடமாகாண சபை கடந்த அமர்வில் நான் கூறிய கருத்துக்களில் தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டலாம்.

அந்த சபை அமர்வில் அனைவரும் அமைதியாக இருந்து விட்டு, சபைக்கு வெளியில் போய் கொக்கரிக்கக்கூடாது. மக்கள் அனுபவித்த துன்பங்களை நேரில் பார்த்தவர்கள் நாங்கள். பல துன்பங்களை அனுபவித்தவர்கள் நாங்கள். மாகாணசபையில் இருக்கும் பலர் இதை அறியமாட்டார்கள். இப்படியான எங்களை அரச சார்பாக நடக்கிறவர்கள், விலை போகிறார்கள் என்று எமக்கு எதிராக பொய்ப் பிரசாரம் செய்வதை இன்றோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். இதை வன்மையாக கண்டிக்கின்றோம்' என்றும் ஜெகநாதன் குறிப்பிட்டார்.

'வடமாகாண சபையால் மக்களுக்கு பயன்கள் கிடைக்கவில்லை என்றால் நாங்கள் கேள்வி கேட்போம். வடமாகாண சபை செய்யக்கூடியதை செய்ய வேண்டும். மக்களுக்காக பேசும் உரிமை எங்களுக்கு இருக்கிறது. முதலமைச்சரோ, அமைச்சர்களோ இயங்காமல் இருக்கும் போது அவர்களை இயங்கச் செய்வதற்கு சபையில் கருத்துக்களை நாம் கூற வேண்டும். இதையே நான் கூறினேன்.

பத்திரிகையாளர் மாநாடு நடத்த வேண்டாம் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறினார்கள். ஆனால், இன்றோடு இந்த பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்று நான் அவர்களுக்கு கூறி இந்த சந்திப்பை மேற்கொண்டேன்.  

முதலமைச்சர் பண்பான மனிதர். ஆனால் நல்ல மனிதர் மட்டும் முதலமைச்சராக இருக்க முடியாது. மதிப்பை மேம்படுத்தி வினைத்திறனுடன் செயற்படகூடியவராக இருக்க வேண்டும். முதலமைச்சர் காரியாலயம் எந்த நாளும் திறந்திருக்க வேண்டும். மக்கள் பிரச்சினைகளை கேட்பதற்கு முதலமைச்சர் எப்போதும் ஆயத்தமாக இருக்க வேண்டும்.

மாகாணசபை உறுப்பினர்கள், முதலமைச்சரை தொடர்பு கொண்டால் முதலமைச்சர் பேசவேண்டும். ஆனால், இவை எதுவும் நடைமுறையில் இல்லை. கொழும்பில் இருந்து வந்த எவரும் எம்மை கொச்சைப்படுத்த முடியாது. அதற்கான அதிகாரமும் அவர்களுக்கு இல்லை' என்று அவர் சுட்டிக்காட்டினார்.

பதவி முக்கியம் இல்லை, கொள்கை தான் முக்கியம். மக்கள் வடமாகாண சபையில் மிக நம்பிக்கை வைத்திருந்தார்கள். ஆனால், தற்போது அந்த நம்பிக்கையில் தளர்வு ஏற்பட்டுள்ளது. ஒன்றாக சேர்ந்து மக்களுடைய நம்பிக்கையை பலப்படுத்துவதற்காகவே சில குறைகளை சுட்டிக்காட்டினேன் என அவர் தெரிவித்தார்.

வடமாகாண சபையின் கடந்த அமர்வின் போது, வடமாகாண அமைச்சர்கள், முல்லைத்தீவு மாவட்டத்தை புறக்கணிக்கின்றனர் எனவும் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு குறைந்தளவு அபிவிருத்திகளே மேற்கொள்ளப்படுகின்றன என்றும் அன்டனி ஜெகநாதன் குற்றஞ்சாட்டினார். அத்துடன். வடமாகாண அமைச்சர்களின் செயல்களில் ஊழல்கள் இருப்பதாக சந்தேகிப்பதற்காகவும் அவர் மேலும் கூறிமுடித்தார்.

'அன்ரனி ஜெகநாதன் வடமாகாண சபைக்கு எதிராக செயற்படுகின்றார்' என்ற செய்திகள் ஊடகங்களில் வெளியிடப்பட்டன. அத்துடன், அமைச்சர்களும் தாங்கள் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுத்ததாகவும் தெரிவித்திருந்தனர்.

இதனால், வடமாகாண சபையின் ஆளுங்கட்சியினருக்கும் அன்டனி ஜெகநாதனுக்கும் இடையில் ஒரு பனிப்போர் ஏற்பட்டிருந்த நிலையில், அன்டனி ஜெகநாதன் இந்த ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனும் கலந்துகொண்டிருந்தார். இருந்தும், அவர் எவ்வித கருத்துக்களையும் கூறவில்லை.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .