-ற.றஜீவன், கி.பகவான்
யாழ். சாவகச்சேரியில் முறையற்ற விதத்தில் இயங்கி வந்த இரண்டு விருந்தினர் விடுதிகள் சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரத்தின் உத்தரவிற்கமைய சாவகச்சேரி நகர சபையால் வெள்ளிக்கிழமை(07) சீல் வைத்து மூடப்பட்டன.
மேற்படி விருந்தினர் விடுதிகளில் விபசார தொழில் நடவடிக்கை இடம்பெற்றதையடுத்தே இந்த விடுதிகள் மூடப்பட்டன.
யாழ். சாவகச்சேரி பகுதியிலுள்ள விருந்தினர் விடுதியொன்றில் விபசாரத்தில் ஈடுபட்ட பெண் உட்பட அறுவர் கடந்த புதன்கிழமை(05) கைது செய்யப்பட்டனர்.
சாவகச்சேரி நீதவானின் உத்தரவிற்கமைய விருந்தினர் விடுதியை சுற்றிவளைத்த கொடிகாமம் பொலிஸார், விபசாரத்தில் ஈடுபட்ட 32 வயதுடைய பம்பலப்பிட்டியை சேர்ந்த பெண், பெண்ணை விபசாரத்திற்காக அழைத்து வந்தவர், விடுதி முகாமையாளர், விடுதி உதவியாளர் மற்றும் இரண்டு வாடிக்கையாளர்கள் என அறுவரை கைது செய்தனர்.
மேற்படி அறுவரும் நேற்று வியாழக்கிழமை(06) நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போது, நீதவான் அறுவரையும் எதிர்வரும் 14ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
மேலும், விபசார நடவடிக்கைகளுக்கு இடவசதிகள் ஏற்படுத்திய இரண்டு விருந்தினர் விடுதிகளையும் சீல் வைக்கும்படி நீதவான் உத்தரவிட்டார்.
அதற்கமைய சாவகச்சேரி நகர தவிசாளர் அ.தேவசகாயம்பிள்ளை தலைமையில் சென்ற கும்பல் விபசார நிலையத்தை சீல் வைத்தது.