2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

காசோலை மோசடி செய்தவருக்கு பிணை

George   / 2014 நவம்பர் 23 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

3 இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய் காசோலை மோசடி செய்த வல்வெட்டித்துறை கம்பர்மலை பகுதியை சேர்ந்த சந்தேகநபரை 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான இரண்டு ஆட்பிணையில் செல்ல பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஜே.கஜநிதிபாலன், சனிக்கிழமை (22) அனுமதியளித்துள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரீ.எஸ்.மீடின், ஞாயிற்றுக்கிழமை (23) தெரிவித்தார்.

அத்துடன், வழக்கு விசாரணையை எதிர்வரும் 26 ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மேற்படி சந்தேகநபர், கொம்மாந்துறையை சேர்ந்த வர்த்தகர் ஒருவரிடம் 3 இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்களை வாங்கிவிட்டு காசோலையொன்றை வழங்கியுள்ளார்.

காசோலையை வாங்கியவர், காசோலைக்கான திகதியில் வங்கியில் காசோலையை வைப்பிலிட்ட போது காசோலைக்குரிய கணக்கில் பணம் இல்லையென வங்கியால் கூறப்பட்டு, காசோலை திருப்பப்பட்டது.

இதனையடுத்து, காசோலையை பெற்றவர், பொருட்களை வாங்கியவரிடம் பணத்தை தரும்படி கேட்டபோது, பொருட்கள் வாங்கிய நபர் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார்.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட கொம்மாந்துறையை சேர்ந்த நபர், காசோலை மோசடி செய்தவருக்கு எதிராக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் கடந்த 19ஆம் திகதி முறைப்பாடு பதிவு செய்தார்.

முறைப்பாட்டின் பிரகாரம் மோசடி செய்த சந்தேகநபர் கடந்த 21ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து, நீதவானின் வாசஸ்தலத்தில் சந்தேகநபர், சனிக்கிழமை (22) ஆஜர்ப்படுத்தப்பட்டதாக பொறுப்பதிகாரி மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .