2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

கடந்தகால தவறான வழிநடத்தலே எமது மக்கள் கையேந்தக் காரணம்: டக்ளஸ்

Thipaan   / 2014 நவம்பர் 23 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்தகால தவறான அரசியல் தலைமைகளினாலேயே எமது மக்கள் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டார்களென, பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள அமைச்ரின் அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை (22) இடம்பெற்ற வடபிராந்திய இலங்கைப் போக்குவரத்துச் சபை, புகையிரதத் திணைக்களம் என்பவற்றின் ஊழியர்களுக்கு நியமனப் பத்திரங்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இணக்க அரசியல் ஊடாக எமது மக்களுக்கு இவ்வாறான வேலைவாய்ப்புகள் கிடைக்கப் பெறும் நிலையில் அதனூடாக அவர்களது வாழ்வாதாரத்தைப் பலப்படுத்தவும் மேம்படுத்தவும் முடியும்.

ஆனால், கடந்தகாலங்களில் கிடைக்கப்பெற்ற சந்தர்ப்பங்கள், வாய்ப்புகளை தமிழ் அரசியல்வாதிகள் தவறாகப் பயன்படுத்தியதன் காரணமாக எமது மக்கள் பல்வேறுபட்ட இடர்பாடுகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது.

அதுமட்டுமன்றி, எமது மக்களைக் கையேந்தும் நிலைக்குக் கொண்டு வந்தவர்கள் கடந்தகால தவறான அரசியல் தலைமைகளே என்று தெரிவித்த அமைச்சர், நாம் அந்த நிலையை மாற்றி, எமது மக்களை சொந்தக் கால்களில் நிற்க வைப்பதே நோக்காகக் கொண்டு செயற்பட்டு வருகின்றோம் எனத் தெரிவித்தார்.

இவ்வாறு கிடைக்கப் பெறுகின்ற வாய்ப்புகளுக்கு ஊடாக நியமனம் கிடைக்கப் பெறுகின்றவர்களும் அவர்கள் சார்ந்து வாழும் சமூகத்தினரும் எதிர்கால வாழ்வை வளம்படுத்துவதுடன், பலப்படுத்தி முன்னேற்றம் காண முடியும்.

இந்நிலையில், தமக்காகச் சேவை செய்பவர்களையும், உழைப்பவர்களையும் மக்கள் சரியான முறையில் இனங்கண்டு, அவர்களுக்குத் தமது ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

அந்தவகையில், எமது மக்களின் நலன்களை முதன்மைப்படுத்தியே நாம் திட்டங்களை வகுத்து அவற்றைச் செயற்படுத்தி வருகின்றோம் என்றும் சுட்டிக்காட்டினார்.

இதன்போது, அமைச்சரின் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.வி.குகேந்திரன் (ஜெகன்) உடனிருந்தார்.

இதில், வடபிராந்திய இலங்கைப் போக்குவரத்துச் சபையின் சாரதிகள் 23 பேருக்கும், நடத்துனர்கள் 35 பேருக்கும், புகையிரதத் திணைக்களத்தைச் சேர்ந்த 54 பேருக்கும் நியமனப் பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .