2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

தேசிய ஒற்றுமை உறுதிப்படுத்தப்படவில்லை: பிரதமர்

George   / 2015 மார்ச் 29 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த் 

நாட்டில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்துவிட்ட போதிலும் இன்னமும் தேசிய ஒற்றுமை உறுதிப்படுத்தப்படவில்லை. தேசிய ஒற்றுமையை நிலைநாட்டுவதே எமது இலக்கு என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 

பலாலியில் முப்படைகள் மற்றும் பொலிஸார் மத்தியில் சனிக்கிழமை (28) உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 

நாட்டினுடைய இறைமையை பாதுகாக்க முப்படைகள் மற்றும் பொலிஸார் ஆகியோர் இணைந்து ஆற்றிய சேவை அளப்பரியது. நாட்டில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்துவிட்ட போதிலும் இன்னமும் தேசிய ஒற்றுமை உறுதிப்படுத்தப்படவில்லை.

தேசிய ஒற்றுமையை நிலைநாட்டுவதே எமது இலக்கு. அதற்காக தான் நாம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். தமிழர்கள் தேசிய ஒற்றுமையில் விருப்பம் கொண்டுள்ளார்கள். இந்த நாட்டில் சிங்கள, முஸ்லீம் மக்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகளை விட தமிழ் மக்களுக்கான பிரச்சினை அதிகம்.

எங்கள் காணி தொடர்பில் எமக்கு எவ்வாறான அக்கறை உண்டோ, அதேபோல தான் தமிழ் மக்களுக்கும் அவர்கள் காணிகள் தொடர்பில் அக்கறை உண்டு.

தமிழ் மக்களின் காணிகளில் முதல் கட்டமாக 1000 ஏக்கர் காணி விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுத்தோம். அதில் 400 ஏக்கர் காணியை தற்போது விடுவித்துவிட்டோம். ஏப்ரல் மாத இறுதியில் மீதமுள்ள 600 ஏக்கர் காணியையும் விடுவிப்போம். காணியை விடுவிப்பதற்கு உதவிய இராணுவத்துக்கு நன்றிகள். 

தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பு இல்லாத வகையில் தமிழ்மக்களின் காணிகளை அவர்களிடமே மீளக் கையளிக்க வேண்டும். அதற்கு தற்போது உதவியது போல இராணுவத்தினர் தொடர்ந்து உதவ வேண்டும்.

தமிழ் மக்களின் காணிகளை அவர்களிடமே மீளக் கையளித்தால் எங்கள் மீது அவர்களுக்கு நம்பிக்கை வரும் அது எமக்கு பாதுகாப்பு. நாம் சண்டை போட்டுக்கொண்டு இருந்தால் பிரச்சினைகளை தீர்க்க முடியாது. 

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் அதில் வெற்றி பெரும் அனைத்து  நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒன்றிணைத்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்து பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். 

எமக்கு குறுகிய கால அரசியல் தேவையில்லை. நீதியை நிலை நாட்டவும் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும் எமக்கிடையில் ஒற்றுமை தேவை. யுத்தத்துக்காக பெற்ற கடனில் இருந்து மீண்டு எமது நாட்டை அபிவிருத்தியை நோக்கிக் கொண்டு செல்ல வேண்டும். 

உங்களதும், உங்கள் குடும்பத்தினரதும், நாட்டினதும் முன்னேற்றத்தை மனதில் கொண்டு செயலாற்றுங்கள் என தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X