2025 ஜூலை 16, புதன்கிழமை

வலி – வடக்கு மீள்குடியேற்றம்: உண்மையில் நடப்பது என்ன?: டக்ளஸ்

Menaka Mookandi   / 2015 ஏப்ரல் 17 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதியில் அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்ட காணிகளில் மீள் குடியேற்றம் தொடர்பில் ஒன்றுக்கொன்று முரணான தகவல்களையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஊடகங்களில் தெரிவித்து வருகின்றனர். இவர்களது கூற்றுக்கள் எமது மக்களை மீள்குடியேற்ற விடயத்திலும் குழப்புவதாகவே அமைந்துள்ளன என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம்; டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நடைமுறை சாத்தியமான வழிமுறையில் எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அக்கறை காட்டாத கூட்டமைப்பினர், அப்பிரச்சினைகளை வைத்து தொடர்ந்தும் தங்களது சுயலாப அரசியலையே நடத்த முற்படுகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தொடர்பில் தென் பகுதி சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பொன்று இன்றைய தினம் கொழும்பில் இடம்பெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் இங்கு கருத்து தெரிவித்த அவர், 'யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதிலிருந்து கடந்த காலங்களில் கணிசமான காணிகளில் நான் மீள் குடியேற்றங்களை மேற்கொண்டுள்ளேன். இதன்போது, இழுத்தடிப்புக்களோ அல்லது எமது மக்களை ஏமாற்றங்களுக்கு உட்படுத்தக் கூடிய நடவடிக்கைகளோ இடம்பெற்றிருக்கவில்லை.

எமது நடைமுறை சாத்தியமான வழிமுறைகளினூடக, சுமுகமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து, எமது அயராத உழைப்பின் மூலமே அத்தனை மீள் குடியேற்றத் திட்டங்களும் சாத்தியமாகின. ஆனால், இன்று அப்படியொரு செயற்பாட்டுத் தன்மை இருப்பதாகத் தெரியவில்லை' என்றார்.

'பாதுகாப்புக்கு பயன்படாத காணிகள் அனைத்தும் விடுவிக்கப்படும் என இராணுவத் தளபதி கூறியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் தெரிவித்ததாக ஒரு செய்தி கடந்த 11ஆம் திகதி ஊடகங்களில் வெளிவந்நிருந்தது.

இந்த நிலையில், குடாநாட்டில் மீள் குடியேற்றத்திற்கு படையினர் தொடர்ந்தும் தடை என அதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ; பிரேமச்சந்திரன் அவர்கள் கூறியதாக ஒரு செய்தி 17ஆம் திகதி அதாவது இன்றைய ஊடகங்களில் வெளிவந்திருக்கிறது.

உண்மையில், வலி வடக்கு மீள் குடியேற்றம் தொடர்பில் என்ன நடக்கிறது என்பது எமது மக்களுக்கு இன்னும் கேள்விக் குறியாகவே உள்ளது. மக்களைத் தொடர்ந்தும் குழப்ப நிலையில் வைத்திருக்க வேண்டும் என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடாக உள்ளது.

மக்களை குழப்ப நிலையில் வைத்திருப்பதன் ஊடாகவே தங்களது சுயலாப அரசியலை முன்னெடுக்க முடியுமென கூட்டமைப்பினர் நம்புகின்றனர். எனவே, பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு சாத்தியமான வழிமுறைகளை கையாள அவர்கள் விரும்புவதில்லை' என்று டக்ளஸ் தேவானந்தா மேலும் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .