2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

வட மாகாணத்திலேயே காடுகள் அதிகம்: ஐங்கரநேசன்

Menaka Mookandi   / 2015 ஜூன் 12 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் ஒன்பது மாகாணங்களிலும் வடமாகாணத்திலேயே காடுகள் அதிகமாக காணப்படுகின்றது. வடக்கில் காடுகளைப் பாதுகாப்பதில் விடுதலைப் புலிகளின் பங்களிப்புப் பெரிதாக இருந்ததாக வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார்.

வலிகாமம் மேற்கு பிரதேச சபையும் உலக தரிசனம் நிறுவனமும் இணைந்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை வியாழக்கிழமை (11) பிரதேச சபையின் மாநாட்டு மண்டபத்தில் நடத்தின். இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

உலக சுற்றாடல் தினத்தன்று இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆற்றிய உரையில் வடக்கின் காடுகள் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். தான் வானூர்தியில் யாழ்ப்பாணத்துக்குப் பயணித்துக் கொண்டிருந்தபோது வில்பத்து காட்டின் ரம்மியமான சூழல் சிதைக்கப்பட்டிருப்பதை தனது இரண்டு கண்களாலும் பார்த்து வேதனையுற்றதாகவும், அதேசமயம் யுத்தம் நடைபெற்ற வடக்கிலும் கிழக்கிலும் காடுகள் அதிக அளவில் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் என்னுடன் ஒருதடவை உரையாடியபோது இதே கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். சமாதான காலப்பகுதியில் உலங்கு வானூர்தியில் அவர் பயணித்தபோது, தென் இலங்கையில் காடுகள் அழிக்கப்பட்டிருப்பதையும் வடக்கில் காடுகள் செழித்து வளர்ந்திருப்பதையும் தான் கண்ணுற்றதாகத் தெரிவித்தார். அந்த அளவுக்கு, எமது காடுகள் யுத்தம் நிலவியபோதும் காப்பாற்றப்பட்டிருப்பதையிட்டு நாம் பெருமை கொள்ளலாம்.

இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் ஏறத்தாழ 29 விழுக்காடு அளவுக்குக் காடுகள் இருக்கின்றன. ஆனால், மாகாண ரீதியாகப் பார்த்தால், இலங்கையின் ஒன்பது மாகாணங்களிலும் வடக்கு மாகாணத்திலேயே காடுகள் அதிகமாக உள்ளன. வடமாகாணத்தின் நிலப்பரப்பில் தற்போது 49 விழுக்காடு அளவுக்குக் காடுகள் மூடிக்காணப்படுகிறது. வடக்கிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலேயே அடர்ந்த காடுகள் அதிகமாக உள்ளன.

எமது காடுகள் காப்பாற்றப்பட்டதில் விடுதலைப் புலிகளுக்கு பெரும் பங்கு இருக்கிறது. உலகின் போராட்ட அமைப்புகள் பலவும் தமது நிதி மூலமாகக் காட்டு வளத்தையே பயன்படுத்தி வந்துள்ளன.

மரங்களை வெட்டி விற்றும், யானைகளை வேட்டையாடித் தந்தங்களை விற்றும் பண தேவையைப் பூர்த்தி செய்திருக்கின்றன. ஆனால், விடுதலைப் புலிகள் வனவள பாதுகாப்புப் பிரிவு என்று தனியான ஒரு நிர்வாக அலகையே உருவாக்கி காடுகளைப் பாதுகாத்து வந்துள்ளார்கள். ஒரு மரத்தைத் தறிக்க நேர்ந்தால் பத்து மரங்களையாவது நட்டுவளர்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வடக்கில் காடுகள் அதிகமாக இருப்பதற்கு இன்னுமொரு காரணம் உள்ளது. முல்லைத்தீவிலும், கிளிநொச்சியிலும் குடியேற்றத் திட்டங்களை மேற்கொண்டபோது எமது மக்கள் காடுகளை அழித்தே களனிகளாக்கினார்கள். யுத்தத்தால் ஏற்பட்ட இடப்பெயர்வு காரணமாகப் பயிர்ச்செய்கை நிலங்களைக் கைவிடவேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த இடங்களை இப்போது காடுகள் மூடிவளர ஆரம்பித்துள்ளன. இந்த நிலங்களில் நாங்கள் மீளவும் பயிர் செய்யவேண்டி நேரிடலாம். அப்போதும் காடுகளை அதிகமாகக் கொண்ட மாகாணமாக வடக்கு மாகாணமே திகழும், திகழவும் வேண்டும். அந்தவகையில் சாத்தியமான இடங்களில் எல்லாம் நாம் மரநடுகையே மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .