2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

மீள்குடியேற அனுமதிக்கப்பட்ட காணிகளிலிருந்து படையினர் வெளியேறவேண்டும்: சந்திரகுமார்

Menaka Mookandi   / 2015 ஜூன் 30 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

வலிகாமம் வடக்கில் படையினரிடமிருந்து விடுவிக்கப்பட்டு மக்களை மீள்குடியமர்வுக்கு அனுமதித்த 1013 ஏக்கர் காணிகளிலிருந்தும் இதுவரை படையினர் முற்றாக வெளியேறவில்லை.  அவர்களை வெளியேற்றுவதற்கு புதிய அரசாங்கம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. படையினருக்கு கட்டளை பிறப்பிக்கும் அதிகாரமுடைய அரசாங்கம் ஏன் தமது ஆளுமையை இதுவரை பயன்படுத்தவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

மீள்குடியேற்றம் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று யாழ்.மாவட்டச் செயலகத்தில் திங்கட்கிழமை (29) நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்ட மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், வலிகாமம் வடக்கில் படையினரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை தாம் மேற்கொண்டு வருவதாகவும் அது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளதாகவும் ஆனாலும் படையினரை வெளியேற்ற முடியாதுள்ளதாக கூறினார்.

இந்தக் கருத்துத் தொடர்பில் பதிலளித்து உரையாற்றுகையிலேயே சந்திரகுமார் மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார். அவர் தொடர்ந்து கூறுகையில், 'நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் இணைந்து மக்களை உத்தியோகபூர்வமாக மீள்குடியேற்றிய காணிகளிலிருந்து இதுவரை படையினர் வெளியேறவில்லை என்பது ஆச்சரியத்துக்குரிய விடயம் ஆகும். படையினருக்கு கட்டளை பிறப்பிக்கின்ற அதிகாரம் அரசாங்கத்துக்கு உண்டு. கட்டளையிட்டும் படையினர் ஏற்கவில்லை என்பது ஆச்சரியப்பட வைக்கின்றது' என்றார்.  

'கடந்த அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில்தான்  59 படைமுகாம்கள் அகற்றப்பட்டதாகவும் இன்றைய ஆட்சியில் படைமுகாம்கள் எவையும் அகற்றப்படவில்லை எனவும் இன்றுள்ள அமைச்சர்களே குறிப்பிடுகின்றனர்.அரசாங்கம் தமது முழு ஆளுமையையும் பிரயோகித்து எமது மக்களின் நிலங்களில் மக்களை மீளக்குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மீள்குடியேறி வரும் மக்களுக்கான உலர் உணவுக் கொடுப்பனவுகள், அவர்களுக்கான தற்காலிக வீடுகளை வழங்குதல், தரமான மலசலகூடங்களை அமைத்துக் கொடுத்தல், அம்மக்களுக்கு நிரந்தர வீட்டுத்திட்டகளை வழங்குதல் போன்ற விடயங்களிலும் கூடிய கவனம் செலுத்த வேண்டும். மீள்குயேறிய மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச மின்சாரம் இடை நிறுத்தப்பட்டுள்ள நிலையில் அதனை மீளவும் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

இந்தக் கூட்டத்துக்கு முன்னராக வலிகாமம் வடக்கில் மீள்குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதிகளை மீள்குடியேற்ற அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .