2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

அனந்தி அனுமதி கோரவில்லை: மாவை

Menaka Mookandi   / 2015 ஜூலை 08 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தன்னை நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளராக நியமிக்குமாறு இதுவரை தமிழரசு கட்சியிடம் கோரவில்லை என அக்கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

யாழ். மார்ட்டீன் வீதியில் அமைந்துள்ள தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் புதன்கிழமை (08) ஊடகவியலாளர்களை சந்தித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 'வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தன்னை வேட்பாளராக நியமிக்குமாறு இதுவரை அவர் எம்மிடம் எழுத்து மூலம் கோரவில்லை. ஊடகங்கள் வாயிலாக தான் கேட்டு வருகின்றார்' என்றார்.

'வடமாகாண சபை உறுப்பினர்கள் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட கூடாது என ஒரு தீர்மானம் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இடையில் எடுக்கப்பட்டு  இருந்தது. சித்தார்த்தன் ஒரு கட்சியின் தலைவர் என்ற ரீதியில் தான் அவர் போட்டியிட ஒரு விதி விலக்கு அளிக்கப்பட்டது.

அனந்தி சசிதரன் நாடாளுமன்ற தேர்தலில் தான் போட்டியிட அனுமதிக்குமாறு எழுத்து மூலமாகவோ நேரடியாகவோ எம்மிடம் கோரவில்லை. அவர் தமிழரசு கட்சியை சேர்ந்தவர். எம்மிடம் வந்து கேட்டு இருக்கலாம். ஆனால், அதனை செய்யாது ஊடகங்களிடம் தமிழரசு கட்சி தமக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை என கூறி வருகின்றார். அவர் வழமையாக ஊடகங்கள், இணையத்தளங்கள் வாயிலாகவே அனைத்து விடயங்களை அணுகி வருகின்றார்.

அவர் தமிழரசு கட்சியின் உறுப்பினர். அக் கட்சியின் சார்பில் மாகாணசபை தேர்தலில் போட்டியிட்டு மாகாணசபை உறுப்பினர் ஆனவர். அப்படியானவர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக செயற்பட்டு வந்ததுடன் ஊடகங்களுக்கும் கருத்து தெரிவித்து வந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினராக சுமந்திரன் இருந்தவேளை அவரின் கொடும்பாவியை எரித்தமைக்காக சாட்சியங்கள் கூட எம்மிடம் இருக்கின்றன. இதன் காரணமாகவே அவர் மீது தமிழரசு கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்தது. இதுவரை அவர் அதுக்கு பதில் அளிக்கவில்லை. அதனை வைத்தே நாம் அவரை கட்சியில் இருந்து நீக்கி இருக்கலாம். அவரை மாகாண சபை உறுப்பினர் பதவியையும் பறித்து இருக்கலாம். ஆனால் நாம் அதனை செய்யவில்லை.

அவர் தன்னை தேர்தலில் போட்டியிட நியமிக்குமாறு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியிடம் கோரிக்கை விடுத்ததாக அறிகின்றோம். அவ்வாறு கோரிக்கை விடுத்திருந்தாலும் அது முறையற்றது. அத்துடன் அக் கட்சி தனக்கு சந்தர்ப்பம் தர இருந்ததை நாங்கள் தடுத்ததாக சொல்வதும் முறையற்றதாகும் என மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .